தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் அனைவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களா?

364

 

 

சம்பந்தன் அவர்களே!  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் பெறும் பலர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்’ என்றும் தெரிவித்துள்ளீர்கள்.

மதகுருமார்களும், பேராசிரியர்களும், சட்ட-வைத்தியத்துறை நிபுணர்களும், சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களா? எங்கே? எப்படி? எந்த சந்தர்ப்பத்தில்? அவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள்? எனும் கேள்விகளுக்கு தங்களால் விளக்கம் தரமுடியுமா?

பேரவையின் உருவாக்கத்துக்குப்   பின்னர், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியினரே, இத்தகைய குதர்க்கமான விமர்சனங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்தக்காட்சிகள் எல்லாமே நமக்கு புலப்படுத்துவது யாதெனில், தங்களதும் தங்கள் கட்சியினதும் தனிப்பட்ட நலன்களுக்கும் – ஏதேச்சதிகாரமான முடிவுகளுக்கும், சலுகைகளுக்கும் – வசதி வாய்ப்புகளுக்கும் – வருமானங்களுக்கும், ‘குறுக்கே இடைஞ்சலாக பேரவை நிற்கப்போகின்றதோ’ எனும் அச்சமும் – அங்கலாய்ப்பும், தங்களை மிகப்பயங்கரமாக பீடித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதுவே முதிர்ச்சியற்ற, சகிப்புத்தன்மையற்ற, அறிவார்ந்தமற்ற, ஆதாரமற்ற, சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை ‘தமிழ் மக்கள் பேரவை’ தொடர்பில் கூற உந்துகின்றது.

நம்பகத்தன்மையான நடத்தைகளால் ‘மக்கள் முன்பாக உங்களை நல்லவர்களாக நிரூபிப்பதை’ விடுத்துவிட்டு, பேரவை மீது வலிந்து குற்றச்சாட்டுகளை திணித்து அவர்களை தவறானவர்களாக சித்திரிப்பதை – அடையாளப்படுத்துவதை, இப்போதெல்லாம்  முழுநேரத்தொழிலாக   இலங்கை தமிழரசுக்கட்சியினர் கொண்டுள்ளமை   ‘நம்பர் ஒன்’ அசிங்கத்தனமாகும்.

தாங்கள் ‘தேர்தல் அரசியலுக்கு அப்பால்பட்டவர்கள்’ என்று பேரவையினர் உறுதிபடத்தெரிவித்த பின்னரும்கூட, இன்னும் விளக்கமாக கூறுவதாயின், ‘நீங்கள் உங்கள் பதவிகளையும் – கதிரைகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் ஊறு விளைவிக்கப்போவதில்லை. நாங்கள் எங்கள் மக்களின் பிரச்சினைகளில் – நலன்களில் கவனம் செலுத்தும் பணியைத்தான் செய்யப்போகின்றோம்’ என்று பேரவையினர் சமுக அக்கறையோடு தெரிவித்த பின்னரும்கூட, அவர்கள் மீது அபத்தமான – அருவருப்பான, அறநெறியற்ற வார்த்தைகளால் தாக்குதல்கள் தொடருகின்றன.

பேரவையை கருத்தியல் ரீதியாக – செயல்பாட்டு ரீதியாக, நேர்வழியில் எதிர்கொள்ளத்திராணியற்ற இந்த செயலை நோக்கும்போது, அவர்களின் புலமைசார் அறிவுக்கும், ஆளுமைக்கும், தகைமைக்கும் முன்பாக தாங்கள் சந்தித்திருக்கும் ‘முதல் தோல்வி’ என்றே கருதவேண்டியிருக்கின்றது. மனப்பாடம் செய்ததுபோல தாங்களே அடிக்கடி கூறிக்கொள்ளும் தங்கள் இராசதந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இப்போது தாங்களே இழந்து வருவதாகவும் கருதவேண்டியுள்ளது.

பேரவையின் உருவாக்கத்துக்கே இத்தனை படபடப்பு என்றால், அரசியலையும் அக்குவேரு ஆணிவேராக பிரித்தாராயப்போகின்றோம் என்று அவர்கள் சும்மா ஒப்புக்கு கூறிவைத்தால், எப்படி இருக்கும்? சலம் சலமாய் வேர்த்துக்கொட்டி வேர்வையாலேயே ஒரு குளியல் போட்டுவிடுவீர்கள் போலல்லவா இருக்கிறது.

கூட்டுக்கட்சி – கூட்டு ஜனநாயகம் என்பதையெல்லாம் கடாசி குப்பைத்தொட்டிக்குள் வீசிவிட்டு, ‘என் கட்சி – தமிழரசுக்கட்சி’ என்று இதுவரை காலமும் ‘தனிக்கட்சி’ வளர்ப்பில் ஈடுபட்டுவந்த தாங்களும் தங்கள் கட்சியினரும், பேரவையின் உருவாக்கத்துக்குப்பின்னர்  சந்தர்ப்பவாதத்துக்கு மட்டும், ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பு’ என்னும் கோசத்தை உயர்த்திப்பிடிப்பதானது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

மக்களால் ‘நிராகரிக்கப்பட்டவர்கள்’ என்ற வாதத்தை கூச்சநாச்சமின்றி, மனச்சாட்சி உறுத்தலுமின்றி முன்வைக்கின்றீர்களே,

1989, 1994, 2000ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் தாங்களும் திருகோணமலை மாவட்டத்தில் ‘ஹட்ரிக்’ தோல்வியை சந்தித்தவர் தானே. 1997ஆம் ஆண்டு தங்கதுரையின் மரணத்திற்குப் பின்னரே தாங்கள் பாராளுமன்ற கதிரையில் அமர்ந்த கதை வேறு உண்டல்லவா?

எந்த ‘புலிக்கூட்டிற்குள் வரமாட்டேன்’ என்று அடம்பிடித்தீர்களோ? அந்த புலிகள் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் வந்ததன் பின்னரே, தேர்தல்களில் தங்கள் வெற்றி சாத்தியமாகின்றது என்பதையும் தங்களுக்கு அழுத்தி நினைவூட்ட விரும்புகின்றேன். இதில் உடன்பாடு இல்லையென்றால், தாங்கள் திருகோணமலையில் சுயேட்சையாக தேர்தல் ஒன்றை சந்தித்து நிரூபிக்கலாம்.

‘தட்டிக்கேட்க யாருளர்?’ எனும் நமட்டுத்துணிச்சலில் கடந்த காலங்களில் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் பலவும் கூட்டமைப்பின் பலத்தை உடைத்தது. ஓரிரு கட்சிகள் வெளியேறிச்சென்றன. சில கட்சிகள் கூட்டமைப்புக்குள்ளே இருந்துகொண்டு, தமிழ் இனத்தின் பொது எதிரியான சிறீலங்கா அரசிடம் ‘உரிமை – நீதி- ஜனநாயகம் – விடுதலை’ கேட்டுபோராடுவதை விடுத்து, அவற்றை முதலில் உங்களிடமிருந்து கேட்டுப்போராட வேண்டிய துன்பியலுக்கு தங்களின் ஏதேச்சதிகாரம் அழைத்துச்சென்றது.

இலங்கையில் இடம்பெற்றுள்ள தமிழினப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தியபோது, இந்த மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் முரணான போக்கில், யார் எவரதோ நலன்களுக்காக, அவர்களை திருப்திபடுத்துவதற்காக, சிற்றின்பங்களுக்காக ஜெனிவா பிரேரணையை உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையாக மாற்றியமைத்ததில் தங்கள் தரப்பு குழுக்களுக்கும் வகிபாகம் உண்டு. அதன் தாக்கம் கவனிப்புக்குரியது மட்டுமல்ல, கேள்விக்கும் உட்படுத்தப்பட வேண்டியது.

தமிழ் மக்கள் தோல்விகளாலும், இழப்புகளாலும், அவமானங்களினாலும், ஏமாற்றங்களினாலும், துரோகங்களினாலும் ‘கற்றுக்கொண்ட பாடங்களே’ தமிழ் மக்கள் பேரவை ஆகும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வரைபு விடையத்திலும் தோற்றுவிடக்கூடாது எனும் அநீதிக்கு எதிரான கோபமே, தமிழ் சமுகத்தின் மீதான அக்கறையே பேரவையின் நியாயங்களாகும்.

இனி தமிழர் அரசியலையும், அதன் ஒவ்வொரு அசைவையும் ‘வோட்ஜ் மேன்’களாக பேரவையினர் கண்காணிப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். தமிழ்த்தலைமைகளின் நம்ப வைத்து கழுத்தறுக்கும் போக்குகள் தொடருமாகவிருந்தால்,

‘மாற்று அரசியல் சக்தியாக தமிழ் மக்கள் பேரவை’ பரிணமிப்பதும் தவிர்க்க முடியாதது. அப்படி நிகழ்ந்துவிட்டால், அதை ஜீரணிக்கும் சக்தியும், எதிர்கொள்ளும் ஆத்ம பலமும் தங்களுக்கு இருக்கப்போவதுமில்லை.

-அ.ஈழம் சேகுவேரா-

SHARE