மேற்படி சாட்சியம் இன்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் செல்வதாஸன் சுகந்தி என்ற பெற்றோரின் மகள் இலக்கியா என்ற இளம் பெண்ணால் வழங்கப்பட்டிருக்கின்றது. குறித்த இளம்பெண் சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
2009.05.08ம் திகதி அப்பா ஷெல் வீச்சில் உயிரிழந்தார். பின்னர் எங்கள் தறப்பாள் கூடாரத்திற்குள் ஷெல் வீழ்ந்ததில் என்னுடைய அம்மா தோளில் காயமடைந்தார். பின்னர் நாங்கள் 2009.05.16ம் திகதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம்.
அப்போது என்னுடைய அம்மா மற்றும் சித்தப்பா காயமடைந்திருந்த நிலையில் அவர்களை படையினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வாகனங்களில் ஏற்றினார்கள்.
அதற்கு ப்பின்னர் பதவியா வைத்தியசாலையில் ஆண்கள், பெண்கள் பிரிக்கப்பட்ட நிலையில் சித்தப்பா என்னுடைய அம்மாவை தவற விட்டுவிட்டார்.
சிகிச்சை முடிந்து சித்தப்பா வந்துவிட்டார். அம்மாவை காணவில்லை. என்னுடைய அம்மா இறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சிறிய காயத்துடன் சென்றார்.
அவரை தேடி கண்டுபிடித்துக் கொடுங்கள் என அந்த இளம்பெண் பிள்ளை உருக்கமாக ஆணைக்குழுவைக் கேட்டது.
2ம் இணைப்பு
எனது சகோதரன் காணாமல் போனமைக்கு சாவகச்சேரி பொலிஸார் முழுமையான பொறுப்பாளிகள்!
என்னுடைய சகோதரன் காணாமல் போனமைக்கு சாவகச்சேரி பொலிஸார் முழுமையான பொறுப்பாளிகள். என செல்வராசா துஷ்யந்தன் என்ற இளைஞரின் சகோதரி காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.
இன்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மேற்படி அமர்விலேயே இந்த சாட்சியத்தை அவர் வழங்கினார்.
சித்திரவதை செய்யப்பட்டு காயங்களுடன் என்னுடைய சகோதரனை சாவகச்சேரி பொலிஸார் நீதி மன்றத்திற்கு கொண்டு வந்தார்கள். சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் காயப்படுத்தப்பட்டமை தொடர்பாக நீதிமன்றில் நீதிபதி கேள்வி கேட்டதை தொடர்ந்து என்னுடைய சகோதரன் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட போது தப்பிச் சென்று விட்டதாக பொலிஸார் கூறிவிட்டார்கள்.
குறித்த சாட்சியத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 2007.05. 28ம் திகதி எனது சகோதரன் மாடு கட்டச் சென்றிருந்த போது படையினர் பிடித்துச் சென்றார்கள். நாங்கள் கொடிகாமம் படைமுகாம் சென்று விசாரித்த போது அவர்கள் பிடிக்கவில்லை. என கூறினார்கள்.
பின்னர் நாங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தோம். மறுநாள் என்னுடைய சகோதரனை படையினர் வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்து காயங்களுடன் வீட்டுக்கு கொண்டுவந்து சோதனை நடத்தினார்கள்.
பின்னர் மறுநாள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் என் சகோதரனைக் கண்டேன். சகோதரனை பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்கள். அங்கே நீதிபதி எதற்காக அடித்து சித்திரவதை செய்தீர்கள் என பொலிஸாரை கண்டித்தார்.
பின்னர் மறுநாள் வீட்டுக்கு வந்த பொலிஸார் உங்கள் சகோதரன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது தப்பிச் சென்று விட்டார். இங்கே வந்தாரா என பார்ப்பதற்கு வந்தோம். எனக் கூறினார்கள்.
பின் நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு கொடுத்தோம். மனித உரிமை ஆணைக்குழு ஊடாக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்றது.
இதன்போது படையினர் தாங்கள் சித்திரவதை செய்யவில்லை. என கூறினார்கள். மேலும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார்கள். அந்த வழக்கும் கைவிடப்பட்ட நிலையில் என்னுடைய சகோதரன் தொடர்பாக எந்தவொரு தகவலும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை என அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.