யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் பல பாடசாலைகளில் நீண்ட காலமாக அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், இந்த வெற்றிடங்களை நிரப்ப வடக்கு மாகாண கல்வி அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்காதுள்ளமை அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது என ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், யாழ்பாணம் கல்வி வலயத்தில் பல பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாகவே நிலவி வருகின்றன.
இவற்றுள் சில பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன.
எனினும், அதிபர்களுக்கான எந்தவொரு வெற்றிடங்களை நிரப்புவதற்கும் மாகாண கல்வி அமைச்சு இதுவரையில் நடவடிக்கை எடுக்காதிருப்பது எமது கல்வித்துறை தொடர்பில் அவர்கள் காட்டும் அக்கறையின்மையையே எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறு, கல்வித்துறை மாத்திரமன்றி, ஏனைய துறைகள் சார்ந்தும் இவர்கள் காட்டும் அக்கறையின்மையானது வேதனைக்குரிய விடயமாகுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.