முல்லைத்தீவில் வலுவிழப்புடனான பிள்ளைகளுக்காக விசேட பாடசாலை

332

மூளைமுடக்குவாதம் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளையுடைய பிள்ளைகளுக்காக “முல்லை நிலா விசேட பாடசாலை” முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் உருவாகியுள்ளது.

“மூளை முடக்குவாதம் மற்றும் அது போன்ற வலுவிழப்புடனான பிள்ளைகளின் வாழ்வை மேம்படுத்தல்” என்னும் திட்டத்தின் கீழ் இந்த விசேட பாடசாலை உருவாகியுள்ளது.

இப் பாடசாலையில் நடமாடும் வசதிகளுக்காக பொருத்தமான ஆதார உபகரணங்கள், அணுகும் வசதிகளுக்கான சேவைகள், மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மேற்கொண்டு குடும்பம் மற்றும் சமுகப் பங்களிப்பினூடாக மூளை முடக்குவாதம் மற்றும் அது போன்ற வலுவிழப்புடனான  600 பிள்ளைகள் கல்வியிலும், சுகாதார வசதியிலும் மேம்பாடடைய வேண்டும் என்பதை நோக்காகக்கொண்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு மீண்டெழுகின்ற முல்லை மாவட்டத்தில் மூளைமுடக்குவாதத்துடன்  பிறந்த பிள்ளைகள் மற்றும் அது போன்ற பாதிப்புக்களையுடைய பிள்ளைகளுக்கான விசேட பாடசாலை, Motivation  நிறுவனத்தின் அனுசரணையுடன் MARDAP நிறுவனத்தினால் கடந்த முதலாம் திகதி  புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின். கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவில் காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.செ.பிரணவநாதன்  அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பாடசாலையில் 5 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட  வலுவிழப்புடனான பிள்ளைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் இத்திட்டத்தின்
கீழ்:-

விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக மூளை முடக்குவாதம் மற்றும் அது போன்ற வலுவிழப்புடனான பிள்ளைகளிற்கு அணுகும் வசதியுடனான வாழ்க்கைச்சூழலை ஏற்படுத்தி குடும்பத்திலும், சமுகத்திலும் அவர்கள் உள்வாங்கப்படுதலையும், பங்குபற்றுதலையும் அதிகரிக்கச்செய்தல்.

வலுவிழப்புடனான பிள்ளைகளுக்கான மருத்துவ முகாம் நடாத்தி வலுவிழப்புக்களை இனங்கண்டு அவர்களுக்கான  ஆதார உபகரணங்கள் அல்லது பொருத்தமான சக்கரநாற்காலிகள் மற்றும் மருத்துவச் சான்றிதழ்கள் வழங்குதல்,

இப்பிள்ளைகளினுடைய பெற்றோர்களுக்கு இப்பிள்ளைகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்குத் தேவையான உயர்தரப்  பயிற்சிகளை வழங்கி பிள்ளைகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுவதற்கான வசதிகளை ஏற்படுத்தல்.

இப்பிள்ளைகள வாழ்கின்ற வீடுகளில்; அவர்கள் தடைகளற்ற வகையில் சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழலையும்,அணுகும் வசதிகளையும் செய்து கொடுத்தல்.

முல்லை மாவட்டத்தில் 2 விசேட பாடசாலைகளை கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில், புதிதாக ஆரம்பிப்பதுடன்  மன்னார் மாவட்டத்தில் மன்னார்நகரம்  மற்றும் நானாட்டான் பிரதேசசெயலாளர் பிரிவுகளில் இயங்குகின்ற 2 விசேட பாடசாலைகளை வலுப்படுத்தல் போன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்றைய நிகழ்வுகள் MARDAP நிறுவனத்தின் இயக்குநர் அருட்சகோதரி  மேரி  அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்களும்,  மதகுருமார்கள் கல்வி, சுகாதார திணைக்களத்தைச் சார்ந்த அலுவலர்கள் ,  மாவட்ட சமுகசேவை அலுவலர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக சமுக சேவை அலுவலர் ஏனைய திணைக்கள அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ;Motivation நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு.டீ.து.சுதர்சன் , சமுக மட்ட அமைப்புக்களின் பிரதிதிகள், நலன் விரும்பிகள்  பொதுமக்கள் மற்றும் வலுவிழப்புடனான பிள்ளைகளின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இ;த்திட்டத்திற்கு, 3 வருடங்களுக்கு ஜேர்மனிய அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஜொகனிட்டர் (JUH) நிறுவனத்தின் ஊடாக மோட்டிவேஷன் நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குகின்றது. மோட்டிவேஷன் நிறுவனம் மார்டப் நிறுவனத்திற்கு நிதி வழங்குவதுடன், தொழில்நுட்ப உதவியையும் வழங்குகின்றது.

எனினும் அக்காலப்பகுதியின் பின் இப்பாடசாலை தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான நிதி மற்றும் பௌதீக வளங்களை பெறவேண்டிய கடமைப்பாடும் உள்ளது. “அனைவருக்கும் கல்வி” என்ற மேலான எண்ணப்பாட்டுடன் இக்கல்விச் செயற்பாடு சிறப்புற நடைபெறுவதற்கான வழிவகைகளை கண்டறிந்து இப்பாடசாலை தொடர்ந்து நீடித்து நிலைத்து இயங்கக்கூடியவாறான உதவிகளை வழங்கவேண்டியது இப்பிரதேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரதும் கடப்பாடாகும்.

நன்கொடையாளர்கள், நலன்விரும்பிகள்  சமூக மட்ட அமைப்புக்கள், மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவை இவ்வாறான வலுவிழப்புடனான பிள்ளைகளின் வாழ்க்கை வளம் பெறுவதற்கான  சேவைகளுக்கு தங்களாலான உதவிகளை வழங்க முன்வருவது வரவேற்கத்தக்கதாகும்.

SHARE