நாட்டில் நல்லாட்சி! நாம் நடு வீதியில்: யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்

308

நாட்டில் நல்லாட்சி இருக்கும் போது நாம் நடுவீதியில் கண்ணீரும் கம்பளையுமாயிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கமே கருணை காட்டு என யாழ். நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விடுதலை செய்யப்பட்ட கோமகன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வந்தார்.

இந்நிலையில் மேலும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ” நாட்டில் நல்லாட்சி நாம் நடு வீதியிலே கண்ணீரும் கம்பளையுமாய், நீதி தேவதையே கண்திற, உண்ணா நோன்பில் அரசியல் கைதிகள் உப்புக் கண்ணீரில் அவர்களின் குடும்பங்கள்.

அரசாங்கமே கருணை காட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசு கூறும் விலைதான் என்ன? அது எம் உயிர் தான் என்றால் எடுத்துக் கொள்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதேவேளை இக் கவனயீர்ப்பில் கலந்து கொண்ட அருட்தந்தை மங்களராஜா கருத்து தெரிவிக்கையில்,

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதனூடாக பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களது ஒப்புதல் வாக்கு மூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றங்கள் தெரிவித்திருந்த போதும் கொழும்பு நீதிமன்றினால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலருக்கு அவர்கள் இல்லாத போது வழக்குகள் இடம்பெற்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அவர்கள் மேன்மூறையீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

எனவே அவ்வாறான அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமையானது மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்டு நீதியினடிப்படையிலும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதி கோமகன் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள். கடந்த முறை ஜனாதிபதி பொது மன்னிப்பளித்து ஜெனிபனை விடுதலை செய்தமையானது எனைய கைதிகளுக்கும் ஒர் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தற்போதைய நிலையில் அவ நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடுமா என்ற ஏக்கத்தில் ஏனைய கைதிகள் உள்ளனர்.

மேலும் அங்கிருக்கும் அரசியல் கைதிகள் யாரும் விரும்பி ஒப்புதல் வாக்கு மூலமளிக்கவில்லை. மாறாக அவர்களை கட்டாயப்படுத்தி சித்திரவதைகளுக்குட்படுத்தி அது அவர்களது விரும்பமின்றி பெறப்பட்டவையாகும்.

கடந்த காலங்களில் அரசியல் கைதிகளுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் எங்களை காப்பாற்றியிருந்தார். அது போல தற்போதும் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசோடு விரைவாக பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனத் தெரிவித்தார்.

SHARE