வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற மஹா சிவராத்திரி உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் மன்னார் பாடல் தலமான திருக்கேதீஸ்வர ஆலய மீள் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற போதும், சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயம் வரும் பக்தர்களின் நலன் கருதி பூசை வழிபாடுகள் அனைத்தும் வசந்த மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அபிஷேகம், அர்ச்சனை நிகழ்வுகளும் அலங்கார மண்டப சிறப்பு நிகழ்ச்சிகளும் இடமபெற்றதோடு விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.
இந்த நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பொலிஸ் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டு எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பான முறையில் மஹா சிவராத்திரி அனுஸ்டிக்கப்பட்டது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி தின வழிபாடுகள்
ஈழத்தில் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
முல்லைத் தீவு மாவட்டத்தில் தானகத் தோன்றியதாக சித்தரிக்கப்படும் குறித்த சிவன் கோவிலின் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
கிளிநொச்சியில் உள்ள சிவன் ஆலயங்களில் சிவராத்திரி விசேட ஆராதனைகள்
சிவராத்திரியை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளன.
அந்த வகையில், முரசுமோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளதோடு, கிளிநொச்சி பாடசாலை மாணவர்களிற்கான சமய வினாவிடைப் போட்டி, முருகானந்தா கல்லூரி பழைய மாணவர்களினால் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே போன்று கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன்கோவில், உதயநகர் சிவன்கோவில், நாகதம்பிரான் கோவில், கிளிநொச்சி கந்தசாமிகோவில், முரசுமோட்டை சங்கரனாராயனர் கோவில் மற்றும் பல கோவில்களில் சிறப்பு பூசைகளும் நடைபெற்றுள்ளதோடு, சமய நிகழ்வுகள் சிறுவர்களின் நடன நிகழ்வுகள் மற்றும் கச்சேரி, வில்லிசை போன்ற பல நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
இறம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயத்திலும் மஹா சிவராத்திரி
சிவராத்திரியை முன்னிட்டு இறம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயத்திலும், ஹற்றனில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம்பெற்றது.
இந்த வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.
மேலும் இந்த விசேட பூஜைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.