பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுங்கள் – பிரசன்னா இந்திரகுமார்

280
இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய இந்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடந்த 25வருடத்துக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உட்பட பல கைதிகள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்களின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துவந்துள்ளது. ஆனால், இதுவரையில் இந்த அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளாக இருந்து கட்டளைகளை பிறப்பித்தவர்கள் இன்று சுதந்திரமான முறையில் நடமாடிவருகையில் அவர்களின் சேவகர்களாக இருந்தவர்களை சிறையில் அடைத்துவைத்துள்ளது நியாயமான விடயம் இல்லை.

நல்லாட்சி அரசாங்கம் இந்த தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதுவித சாதகமான நடவடிக்கையினையும் எடுக்காதது கவலைக்குரியதாகவே உள்ளது.தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வளித்து விடுவிப்பதாக கடந்த காலத்தில் சில நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதே ஒழிய விடுதலை என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றது.

இன்று தமது விடுதலையை வேண்டி தமிழ் அரசியல்கைதிகள் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டபோது வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே மீண்டும் கைதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் என்று கூறும் அரசாங்கம் சிறையில் வாடிவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய விரைவான நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி தமிழ் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG_0079

SHARE