கழுகு மீது காட்டப்படும் பாசம்! இசைப்பிரியா உள்ளிட்டோர் மீது மட்டும் வன்மமாகிப் போனதேன்?

259

இலங்கையில் கழுகு ஒன்றை வதைத்துக் கொன்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு இளைஞர்கள் நேற்று காலிப்பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுப் பிரதேசமொன்றில் பிடிபட்ட கழுகை அவர்கள் துண்டுகளாக வெட்டி, வதைத்து கொன்றமைக்காக வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியான உடன் சமூக வலைத்தளங்களில் அது தீவிரமாகப் பரவி, அதில் தொடர்புடைய இளைஞர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று பலரும் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்கள்.

இலங்கையில் நிலவும் கலாசாரப் பழக்க வழக்கங்களின் பிரகாரம் உயிரினம் ஒன்றைக் கொன்று புசிப்பது ஒன்றும் பாரிய குற்றச் செயலாக கருதப்படுவதில்லை. ஆனால் மனித உயிர் ஒன்றை வதைப்பது, அநாவசியக் கொலை என்பன மனிதாபிமானத்துக்கு இழுக்காகவும், சர்வதேச சட்டதிட்டங்களின் பிரகாரம் பாரிய இழுக்கானதாகவும் கருதப்படுகின்றது.

அந்த வகையில் பார்க்கின்ற போது கழுகு ஒன்றைக் கொன்றவர்கள் மீது தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பொங்கியெழுந்தவர்கள் இலங்கையின் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்ட அப்பாவிகள் மீதோ, சிதைத்துக் கொல்லப்பட்ட இசைப்பிரியாக்கள் மீதோ இரக்கம் காட்டத் தயாராக இல்லை. அது தொடர்பான நீதியை நிலைநாட்டும் வகையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட கலப்பு நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை.

சர்வதேச போர் நியதிகளின் பிரகாரம் நிராயுதபாணியாக சரணடையும் எதிரியை வார்த்தைகளால் துன்புறுத்துவது கூட தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் சரணடைந்த புள்ளிமான்கள் போன்ற எம் சகோதரிகள் ராணுவக் கழுகுகளால் சூழப்பட்டு, கொத்திக் குதறப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் விலங்குள் மீது கருணை காட்டும் பேரினவாதிகளின் மனச்சாட்சிகளை இதுவரை உலுக்கவில்லை.

ஈழத்தாயாக போலி வேடம் போடும் ஜெயா அம்மையார் போன்று இவர்களும் போர் என்றால் அப்பாவிகளும் உயிரிழக்கத்தான் செய்வார்கள் என்று தங்கள் மனதை தேற்றிக் கொண்டு கருணைகளை எல்லாம் காட்டு விலங்குகளுக்கு மட்டுமாய் மூட்டை கட்டி வைத்துக் கொண்டு விட்டார்களோ தெரியவில்லை.

SHARE