நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30க்கு பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. வாய்மூல வினாக்களுக்களுக்கான கேள்வி நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியின் எம்.பி.யான உதயபிரபாத் கம்மன்பில அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமரவிக்கிரமவிடத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.
அந்த கேள்வியில் ஜோர்ஜ் சொரோஸ் ஐக்கிய இராச்சியத்தின் திறைசேரிக்கு 3.4 பில்லியன் பவுண்ட் நட்டத்தை ஏற்படுத்தியதற்கும் ஐக்கிய ஐரோப்பிய செலவாணி பொறிமுறையிலிருந்து விலகுவதற்கு செயலாற்றியதற்கும் 1992ம் ஆண்டு செப்டெம்பர் 16ம் திகதி நிகழ்ந்த பவுண்ட்களின் பாரிய பெறுமதியிறக்கத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபராக இனங்காணப்பட்டுள்ளார்.
1997ம் ஆண்டு ஆசிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியவராவார் என அரச தலைவர்களும் பொருளாதார விற்பன்னர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். 2006ம் ஆண்டு பிரான்ஸ் உயர்நீதிமன்றத்தினால் பங்குச்சந்தை மோசடி ஒன்றிற்கு குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறானவொருவரை கடந்த ஜனவரியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டின் சிறப்பு அதிதியாக பங்கேற்குமாறு அரசாங்கம் ஏன் அழைத்திருந்தது? இவ்வாறான மோசடி புரிந்தவரை சிறப்பு அதிதியாக அழைப்பதானது நல்லாட்சி எண்ணக்கருவுக்கு பொருத்தமானதா எனக் கேள்வியெழுப்பினார்.
இதன்போது குறித்த வினா நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) என்னிடம் கையளிக்கப்பட்டது. முதலில் அந்த வினாக்கள் எனது அமைச்சுக்கு உட்பட்டதா என்பதை பரிசீலித்து இரு வாரத்தில் பதிலளிக்கின்றேன் என அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த வினாவுக்கான தெளிவுபடுத்தலொன்றை தான் வழங்குவதாக கூறினார்.
பிரதமர் கருத்துக்களை முன்வைக்கையில், நாங்கள் ஜோர்ஜ் சொரோஸை இலங்கைக்கு அழைக்கவில்லை. அவர் குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்தார். அவருக்கு ஒரு சதத்தைக் கூட நாம் வழங்கவில்லை. என்னையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அழைத்திருந்தார்கள். நாங்கள் விருந்தாளிகளாக சென்றிருந்தோம். நாம் அவரை அழைக்கவில்லை. அவர் வருகை தருகிறார் என்பதையே சபையில் அறிவித்தேன்.
அதன்போது நீங்களே அழைத்தீர்கள் அவருக்கு வழக்குகள் காணப்பட்டுள்ளன எனக்கூறி கூச்சலிட்டனர். உங்களால் நாங்கள் ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக செலுத்த வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். அதனை மறந்து தேவையற்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ச ரெஜிமண்ட்டின் ஆட்சிக்காலத்தில் அவர் வருகை தந்திருக்கவில்லை. வெற்றிலை வைத்து அவரை அழைத்தார்கள். அவர் போன்ற பலரை அழைத்தார்கள். ஆனால் யாரும் வருகை தந்திருக்கவில்லை. அவர்கள் வந்திருந்தால் முதலீடுகளில் 5 சதவீதம் தரகுப் பணத்தைப் பெற்றிருப்பீர்கள். அந்த அச்சத்திலேயே அவர்கள் வருகை தந்திருக்கவில்லை.
ஜோர்ஜ் சொரோஸ் மட்டுமல்ல ரிக்கடொஹவுஸ், மொண்டோ, கல்வேரியா ஆகியோரும் வருகைத் தந்திருந்தார்கள். அவர்களின் முதலாளித்துவ கொள்கையில் குறைநிறைகள் பற்றி கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் உங்களுடைய காலத்தில் அவர்கள் வந்திருந்தால் அவர்களை பயன்படுத்தி மேலும் களவாடியிருப்பார்கள்.
பங்குச் சந்தையில் களவெடுத்துள்ளார்கள். மூன்று மாத காலத்திற்குள் திருடர்கள் வெளிபடுத்தப்படுவார்கள். அவர்களின் திருட்டு முறைகள் வெளிப்படுத்தப்படும். சிறந்த சட்டத்தரணிகளை தெரிவுசெய்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
மஹிந்த ராஜபக்ச ரெஜிமண்ட் அவர் இவர் என திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் பக்கச்சார்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன்போது கம்மன்பில எம்.பி. குறிப்பிடுகையில் அவன் இவன் என பிரதமர் முறையற்ற வகையில் கூறுவதாக குற்றம் சாட்டினார்.
எனினும் அதற்கு பதிலளித்த பிரதமர் நான் இவரைக் கூறவில்லை. அவ்வாறு கூறவுமில்லை. திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களையே கூறுகின்றேன். வெளியில் உள்ளவர்களையே கூறினேன். அதில் இவரும் உள்ளாகின்றார் என்றால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்றார்.
அதனையடுத்து பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உங்களுடைய வினாவுக்கான தெளிவுபடுத்தலொன்றையே வழங்கினார். உங்களுடைய வினாவுக்கு போதிய விளக்கமான பதில் தேவைப்படுமாயின் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதனை விரைவில் வழங்குவார். அவ்வாறில்லையென்றால் இவ்வினா அகற்றப்படும் எனக் குறிப்பிட்டார்.