இந்திய மீனவர்கள் 65 பேர் தொடர்ந்தும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த மீனவர்களுக்கு சொந்தமான 90 இற்கும் அதிகமான மீன்பிடி படகுகளும் இலங்கையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த நிலைமையின் கீழ் இலங்கை மீனவர்கள் சிலரும் இந்தியாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் பரிமாற்றிக் கொள்ளப்படுவதுடன், அவர்களின் படகுகள் விடுவிக்கப்படமாட்டாதென அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை அரச உடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இருநாட்டு மீனவர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.