பாதாளக் குழுக்களை ஒடுக்குவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு!

277

நாட்டில் பாதாள உலகக் கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன என்பது தங்கொட்டுவை பகுதியில் நடந்துள்ள கொடூரமான சம்பவத்தைப் பார்க்கும் போது நன்கு புரிகிறது.

ஐந்து சடலங்கள் வாகனம் ஒன்றுடன் எரிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அப்பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளன. ஆயுதம் தாங்கிய கிரிமினல்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இனம்புரியாத அச்சமும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

பாதாள உலகக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கு இனிமேலும் இடமளித்து விட முடியாது. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனிமேலும் தொடருமானால் அது அரசாங்கத்துக்கும் அழகல்ல. இக்கும்பல்களைப் பிடித்து நீதியின் முன்னால் நிறுத்துவதற்கு அரசாங்கம் மேலுமொரு படி தீவிர நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம்.

நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்திலும் பாதாள உலகக் குழுக்கள் இப்போதையதைப் பார்க்கிலும் மிக மோசமாகத் தலைவிரித்தாடியமை ஞாபகமிருக்கலாம். ஆனால் அன்றைய காலத்தில் பாதாள உலகக் குழுக்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன.

பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது பாதாள உலகக் குழு முக்கியஸ்தர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டதாலேயே இக்குழுக்கள் அடங்கிப் போயிருந்தன.

மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்லப்படும் வேளையில், பொலிஸார் மீது குண்டெறிய முற்பட்ட போது பாதாள உலகக் கேடி சுட்டுக் கொல்லப்பட்டதாக அன்றைய காலத்தில் அடிக்கடி செய்திகள் வெளியாவதுண்டு.

இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களாலும், தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளாலும் பாதாள உலகத்தினர் பலர் முழுமையாக அடங்கிப் போயிருந்தனர்.

எவ்வாறெனினும் கைதி ஒருவரோ அல்லது தேடப்படும் நபர் ஒருவரோ பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுவதென்பது, மனித உரிமைகளுக்குப் புறம்பான விடயமாகும். இது போன்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது தவறு.

அவ்வாறு நியாயப்படுத்துவதானது பொலிஸாரின் கைகளில் சட்டத்தை ஒப்படைப்பதற்குச் சமமாகும். இவ்வாறு நியாயப்படுத்துவதையே பொலிஸார் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்தும் அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட வழியேற்படலாம். பொலிஸாரின் அத்துமீறல்கள் எல்லை மீறுமானால் நாட்டில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் அர்த்தமற்றதாகிப் போய் விடலாம்.

ஆனால் பாதாள உலகத்தினர் போன்ற கொடூரமான குற்றவாளிகளை அழித்தொழிப்பதானால் மேற்கூறியதைப் போன்ற அதிரடி நடவடிக்கைகளே அவசியமென வாதிடுவோரும் உள்ளனர். கப்பம் பெறுதல், கூலிக்குக் கொலை செய்தல் போன்ற ஈவிரக்கமற்ற செயல்களில் பாதாள உலகத்தினர் ஈடுபடுவதாலேயே அவர்கள் மீது சாதாரண மக்களுக்கு இவ்வகையான வஞ்சம் உள்ளதென்பது உண்மை.

எது எவ்வாறிருந்த போதிலும், தற்போது பாதாள உலகத்தினரின் அட்டகாசம் அதிகரித்திருப்பதனால் இனிமேலும் பொறுமை காப்பது அரசாங்கத்துக்கு அழகல்ல.

பாதாள உலகக் கேடிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இன்றைய நெருக்கடியைப் பார்க்கின்ற போது விசேட பொலிஸ் குழு வினைத்திறனுடையதா என்ற சந்தேகம் எழுகிறது.

விசேட பொலிஸ் குழு தனது நடவடிக்கையை இரு மடங்கு தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. இல்லையேல் பாதாள உலகக் குழுக்களை அடக்குவதற்காக பாரியளவிலான செயற்றிட்டமொன்றை அரசாங்கம் உடனடியாக உருவாக்குவது அவசியமாகும்.

கடந்த வருடம் ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து உருவான ஜனநாயக சூழல் காரணமாகவே பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் மீண்டும் தலையெடுத்துள்ளதென்பதை இங்கு கூற வேண்டிய அவசியமில்லை.

மனித உரிமைகளைப் பேணுகின்ற ஜனநாயக சூழலை உருவாக்குவதில் அரசாங்கம் நாட்டம் கொண்டுள்ளதனால், பொலிஸார் இன்று கடைப்பிடிக்கின்ற கட்டுக்கோப்புகளை பாதாள உலகத்தினர் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த முற்படுகின்றனர்.

பொலிஸாரின் நடவடிக்கை மீதான அச்சம் இப்போது பாதாள உலகக் கும்பல்களிடம் இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் தலையெடுக்கப் பார்க்கின்றனர்.

இவ்வாறான நிலைமைக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது. பொதுமக்கள் மத்தியில் அச்சம் உருவாகுவது ஒருபுறமிருக்க, அரசுக்கு எதிரான சக்திகள் இன்றைய நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முற்படுவதும் தெரிகிறது.

பாதாள உலகத்தினர் தலைதூக்குவதற்கும் அரசாங்கத்தின் பலவீனமே காரணமென அவர்கள் கூற முற்படுகின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவதற்கான துரும்பாக பாதாள உலகத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றனர். இதுவும் அரசுக்கு ஆரோக்கியமானதல்ல.

கொடூரமான குற்றவாளிகள் விடயத்தில் அசமந்தமாக இருந்து விட்டு, சிறு குற்றவாளிகள் மீதே பொலிஸார் கவனம் செலுத்துவது வழக்கமென பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே அபிப்பிராயமொன்று நிலவி வருகிறது.

இந்த அபிப்பிராயம் களையப்பட வேண்டும். கொடிய குற்றவாளிகளை ஒடுக்குவதானால் அதிரடி நடவடிக்கைகளே அவசியமாகின்றன. பொலிஸ் திணைக்களம் பாதாள உலகக்குழு விடயத்தில் விழிப்படைய வேண்டிது இப்போது அவசியம்.

SHARE