ஜனாதிபதியின் மீள் உறுதிமொழி

260

யாழ். வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தம்மை மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுமாறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களது காணிகள் மீள வழங்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதி வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருந்த காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துறை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டன.

இதனைக் கையளிக்கும் நிகழ்வு காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றுகையிலேயே மீண்டும் இந்த உறுதிமொழியை வழங்கியிருக்கின்றார்.

President-Maithripala-Sirisena-Writes-to-Mahinda-Rajapaksa-Prime-Minister-should-be-handed-over-to-a-senior-member-of-the-Sri-Lanka-Freedom-Party-who-has-not-yet-been-granted-this-opportunity.

உண்மையான சமத்துவம்,ஏற்படவேண்டுமானால் அனைவருக்கும் உரிமைகளை வழங்கவேண்டும். அதனூடாகவே சமத்துவமாக அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நாடொன்றை உருவாக்க முடியும். வடக்கு மக்களின் அபிவிருத்திக்கும் மேம்பாட்டிற்கும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.

வடமாகாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரது செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவோம். வாக்குறுதி அளித்ததன் படி எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் அனைவரது காணிகளையும் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி இந்த நிகழ்வில் உறுதிபட தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு மாகாணத்தில் போரால் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதன் பிரகாரம் 65 ஆயிரம் வீடுகளை தற்போது அமைத்து ஒரு தொகுதி மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்திட்டத்தின் மாதிரி வீடொன்றை பார்வையிடுவதற்கும் காணிகளை இழந்து இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு அவர்களின் சொந்த நிலங்களை மீளக்கையளிப்பதற்காகவே நான் இன்று விஜயம் செய்துள்ளேன். இங்கு வாழும் மக்கள் மோசமான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

போரின் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டன, சொத்திழப்புக்கள் ஏற்பட்டன. இவற்றைத் தாண்டி வறுமை நிலை அதிகரித்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைவிட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது என்னை சந்தித்தார். அதன்போது இடம்பெயர்ந்து வாழும் மக்களிடம் அவர்களுடைய காணிகளை மீளக்கையளிக்குமாறு கோரியிருந்தார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வலியுறுத்தப்படும் விடயமாக இது அமைந்துள்ளது.

அந்த செயற்பாட்டினை நாம் நிச்சயம் நிறைவு செய்வோம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் கூறியிருக்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஜூன்மாதத்திற்குள் மீளக்குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்துள்ளமை வரவேற்கத்தக்க நடவடிக்கையேயாகும். கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள முகாம் ஒன்றுக்கு நேரில் சென்ற ஜனாதிபதி அங்கு மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை கண்டறிந்துள்ளார்.

இதன்பின்னர் நடைபெற்ற நத்தார் தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாத காலங்களுக்குள் வலிகாமம் வடக்கில் மக்கள் மீள குடியமர்த்தப்படுவார்கள். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதி இவ்வாறு உறுதிமொழியளித்து தற்போது மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில்தான் ஜனாதிபதி மீண்டும் ஜூன்மாதத்திற்குள் மீள்குடியேற்றம் இடம்பெறும் என்று உறுதி வழங்கியிருக்கின்றார்.

ஆனாலும் வலிகாமம் வடக்கில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்கள் தம்மை மீளக்குடியேற்றுமாறு கோரியும், தமது நிலங்களை மீளவழங்குமாறு கோரியும் கடந்த இரு வாரங்களாக போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கடந்த 4ஆம் திகதியும் 11 ஆம் திகதியும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் ஒன்றிணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த மக்களின் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில்தான் ஜூன் மாதத்திற்குள் மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கின்றார்.

இந்த அறிவிப்புக்கிணங்க எதிர்வரும் மூன்றுமாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் இடம்பெறவேண்டுமானால் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விரைந்து விடுவிக்கப்படவேண்டும். அதற்கான சாத்தியம் உள்ளதா? என்ற விடயத்தில் சந்தேகமான நிலையே நிலவுகின்றது.

ஏனெனில் 2015 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதையடுத்து புதிய ஆட்சி மலர்ந்தது. புதிய ஆட்சியில் தாம் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேற முடியும் என்ற நம்பிக்கை இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

இதற்கிணங்க வலிகாமம் வடக்குப் பகுதியில் 1200 ஏக்கர் நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இவர்கள் பொதுமக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படுமென்று உறுதி வழங்கியிருந்தனர். ஆனால் அதன் பின்னர் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் விடயத்தில் இழுபறி நிலையே காணப்பட்டது. தற்போது 700 ஏக்கர் காணிகள் வரையில் விடுவிக்கப்பட்டன.

இந்த நிலையில் மயிலிட்டித்துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி என்பவற்றுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டினால் தமது காணிகள் மீளக்கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களின் மனங்களில் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இதனால்தான் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் தற்போது அடையாள உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

கடந்த மூன்று தசாப்தகாலமாக தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் மனநிலையை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கிணங்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஜூன்மாதத்திற்குள் அந்த மக்கள் சொந்த காணிகளில் குடியேறும் நிலை உருவாகவேண்டும். இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையாக இருப்பது அவரது பேச்சுக்களில் புலப்படுகின்றது.

எனவே இந்த விடயம் நிறைவேற்றப்பட்டால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இடம்பெயர்ந்த மக்களின் விவகாரம் இவ்வாறிருக்கையில் யாழ். குடாநாட்டில் வீடுகளை இழந்த மக்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையும் வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.

ஆனால் இந்த வீடுகள் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்றவகையில் அமைத்துக்கொடுப்பது இன்றியமையாததாகும்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த பாடசாலைகளை மீளக்கையளிக்கும் நிகழ்வுக்கு தலைமைதாங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வீ. விக்கினேஸ்வரன் இந்த வீடுகள் அமைக்கும் விடயத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும் வீடுகளின் மாதிரிகளைப் பார்வையிட்டோம். அது எங்கள் சுற்றாடல், காலநிலை, கலாசாரத்திற்கு பொருத்தமானவையாக இல்லை என்று கூறியுள்ளார். முதலமைச்சரின் கருத்தையடுத்து உரையாற்றிய மீள் குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் இந்தக் கூற்றினை மறுத்துரைத்திருந்தார்.

இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி அமைச்சர் சுவாமிநாதனோ, அல்லது முதலமைச்சரோ இந்த வீடுகளில் வசிக்கப்போவதில்லை மக்களே வாழப்போகின்றார்கள். அவர்களுக்கு ஏற்றவகையில் வீடுகளை அமைக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையிலேயே இந்த வீடுகள் மக்களுக்கு ஏற்றவகையில் அமைக் கப்படவேண்டும். இது குறித்தும் கவனம் செலுத்துவது நல்லது.

SHARE