மின்சாரத் தடை ஏற்படுத்திய பாதிப்பு – வீடு எரிந்து நாசம்

261

மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தின் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி வீதியில் கோமலன் சுதா என்பவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடையினால் அறையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்த தளபாடங்கள், கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், துணிகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் மின்சார உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கோமலன் சுதா தெரிவிக்கையில்,

வீட்டில் தானும் தனது கணவரும் வசிப்பதாகவும், தனது கணவர் இன்னும் ஒரு மாதத்தில் வெளிநாடு செல்லவிருந்ததாகவும், இந்த நிலையிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE