பாதுகாப்புக்கு தேவையான காணிகள் தவிர ஏனையவை விடுவிக்கப்படும்! காணி அமைச்சர்

253

வடக்கில் பாதுகாப்புக்கு அத்தியாவசியம் என்று கருதப்படும் காணிகளைத் தவிர ஏனையவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை ஏற்கனவே ஜனாதிபதி பகிர்ந்தளித்துள்ளார் என காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

JHONE-AMARATUNKA-5748547545

காணி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

வடக்கில் மக்கள் வசித்து வந்த இடங்களில் இருந்து கடந்த காலங்ளில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகள் காரணமாக அவர்கள் அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவர்களுக்கு காணி உறுதி இருந்தால் அந்த காணிகள் நிச்சயமாக வழங்கப்படும். அவர்கள் இருந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்தப்படுவார்கள்.

மேலும் கடந்த காலங்களில் பல்வேறு வகைகளில் காணிப்பத்திரங்கள் பல பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தவொரு பத்திரத்திலும் காணி உரித்து விடயத்தில் உறுதியான பத்திரமாக இல்லை. இதனால் இந்த காணிகளை பிள்ளைகளுக்கு எழுதவோ வியாபாரத்துக்கு பாவிக்கவோ அல்லது மேல் மாடிகளை கட்டவோ முடியாது.

இதனால் இது தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளார். இந்த குழு காணி தொடர்பான சட்டமூலத்தின் வரைபை தயாரித்து வருகின்றது. எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதமளவில் சட்டவரைபு முன்வைக்கப்படும். அப்போது அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் பாரியளவில் காணிகள் இருக்கின்றன. ஆனால் அதன் அளவு குறித்து இன்னும் எங்களுக்கு தேடிக்கொள்ள முடியவில்லை. இவற்றை யாரேனும் கைப்பற்றி இருக்கின்றார்களா என்று தேடிப்பார்க்க வேண்டியிருக்கின்றது.

அத்துடன் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கீழ் வெற்றுக் காணிகள் இருக்கின்றன. இவற்றை சரியான முறையில் இனம் கண்டு கஷ்டப் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு 10 பேர்ச்சஸ் அடிப்படையில் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகளை தேடிப் பார்த்து இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கின்றது. அதன் பிறகு இவற்றின் ஒருபகுதி நாட்டின் பொருளாதாரத்துக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவேண்டி இருக்கின்றது.

இதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக மக்கள் வாழ்வதற்கு வழங்க வேண்டியிருக்கின்றது.

எனவே நல்லாட்சி அரசாங்கம் காணி தொடர்பான வரைபொன்றை ஏற்படுத்தி காணியற்றவர்களுக்கு காணி வழங்குவதற்தும் உரித்து உறுதி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும் என்றார் .

 

SHARE