‘சந்தையை நோக்கிய சூழல் நேயமான விவசாயம்’ என்னும் தொனிப்பொருளில் அமைந்த இக்கண்காட்சியில் விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம், மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், பனை அபிவிருத்திச்சபை, தென்னை அபிவிருத்திச்சபை, விதை ஆராய்ச்சிப்பிரிவு, விதை அத்தாட்சிப் பிரிவு போன்றவை காட்சிக் கூடங்களை அமைத்திருந்தன.
நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை!
வடபகுதியில் அமைந்துள்ள இரண்டு பெரிய குளங்களில் இராட்சத குளம் என அழைக்கப்படும் கட்டுக்கரைக் குளம் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இசைமாலைத்தாழ்வு தொடங்கி பரப்புக்கடந்தான் வரையான மிக நீண்டு பரந்துள்ள நிலப்பரப்புக்களில் பெரிய நாவலடி, நாகதாழ்வு, மாளிகைத்திடல், உயிலங்குளம், முருங்கன், நாநாட்டான், அரிப்பு வரையுள்ள பிரதேசங்களில் நெற்பயிர்ச்செய்கை மிகவும்பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
சுமார் 15 km நீளம் வரை நீண்டு பரந்து கிடக்கும் இக்குளக்கட்டுக்களையும், சீரான நீர் விநியோகத்தினையும் உறுதி செய்வதற்கும் முகாமைத்துவம் செய்வதற்குமெனத் தனியானதொரு பொறியியற் பிரிவு அந்தக் காலத்தில் இருந்தே இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று அறிகின்றேன்.
இக்குளத்தின் நீர் மட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகின்ற காரணத்தினால் தண்ணீருக்கு பஞ்சமில்லாமல் பயிர்ச் செய்கைகளை மூன்று போகங்கள் கூட மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது.
அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடியதும் கூடிய சந்தைப் பெறுமதியைக் கொண்டுள்ளதுமான “கீரிச்சம்பா நெல்” இனங்களையே இப்பகுதி மக்கள் பயிரிடுகின்றனர் என்றறிகின்றேன்.
வடபகுதி மக்கள் சிவப்பு அரிசிகளையே உண்ணும் பழக்கம் உடையவர்களாகையால் இவர்களின் நெல் விளைச்சலில் பெரும்பகுதி தென் இலங்கை வாழ் மக்களாலேயே கொள்முதல் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றது.
இரணைமடுக்குளம், கட்டுக்கரைக்குளம் ஆகிய இரண்டு இராட்சதக் குளங்களின் கீழும் விவசாயம் செய்யப்படுகின்ற நெல்லின் அளவு வடபகுதி மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கின்ற காரணத்தினால் இப்பகுதி மக்கள் உண்ணக்கூடியதும் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடியதுமான சிவப்பு நெல் இனங்களையும் விவசாயிகள் தெரிவு செய்ய முடியும்.
இது சந்தையைப் பொறுத்து எடுக்கப்பட வேண்டிய தீர்மானமாகும். இந்த விவசாயக் கண்காட்சியின் தொனிப்பொருளாக அமைந்திருக்கக்கூடிய “சந்தையை நோக்கிய சூழல் நேயமான விவசாயம்” என்ற கூற்றின்படி எமது விவசாய நடவடிக்கைகள் சந்தை வாய்ப்புக்களைக் கொண்டதாகவும் அதே நேரம் சூழலை மாசுபடுத்தாத முறைமையிலும் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
நாங்கள் இப்பகுதிகளில் நிலத்தடி நீரையே அருந்துவதற்குப் பயன்படுத்துகின்றோம். விவசாய நடவடிக்கைகளின் போது முறையற்ற விதத்தில்ப் பயன்படுத்தப்படும் அதிகளவு யூரியா தேவைக்கு அதிகமாகி நிலத்தடி நீரில் கலந்து கொண்டு நீரின் நைத்திரேற்று அளவுகளை அதிகரிக்கச் செய்து விடுகின்றது.
இந்த நீரை நாம் தொடர்ந்து பருகி வருகின்ற போது எமது உடலில் பாரிய தாக்கங்களை அந்த நீர் ஏற்படுத்துகின்றது. எனவே செயற்கை உரப்பாவனைக்குப் பதிலாக இயற்கைக் கூட்டுப்பசளைகளை நாம் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும்.
இப்பகுதியில் உள்ள காடுகளில் தேவையான மர இலைச் சருகுகள் குவிந்து கிடக்கின்றன. மாட்டெரு சேகரிக்கப்படாது ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றது. இவற்றை நாம் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தலாம். இரசாயன உரப்பாவனைகளின் அளவையும் குறைத்துக் கொள்ள முடியும்.
நான் கொழும்பில் உள்ள என் வீட்டின் மாடியில் தொட்டிகளிலேயே எனக்குத் தேவையான மரக்கறி வகைகளை உண்டாக்கி வந்தேன். ஒவ்வொரு நாளும் கிடைக்கும் இலை, குழை, சருகுகளையும் குசினி எச்சங்களையும் கொம்போஸ்ட் எனப்படும் இயற்கையுர கலசங்களில் இட்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை இயற்கை எருவை நானே தயாரித்து மரங்களுக்கு இட்டு வந்தேன்.
விவசாய மேம்படுத்தல் இரண்டு படிமுறைகளில் விரிவாக்கப்படலாம் என்று எண்ணுகின்றேன்.
1. விவசாயத்தில் ஈடுபடுகின்ற பெரிய, நடுத்தர அளவிலான விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் அவர்களின் உற்பத்திகளை அதிகரிக்கச் செய்தலும், சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தலும்.
2. இரண்டாவது வகை எந்தவித விவசாய முயற்சிகளிலும் ஈடுபடாதவர்களை வீட்டுத்தோட்டங்களை உருவாக்கத் தூண்டுதல்.
இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தமது தேவைக்குரிய மரக்கறி வகைகளைத் தாமே உற்பத்தி செய்வதன் மூலமாக உரப்பாவனை, கிருமிநாசினி பயன்பாடுகளற்ற உடன் பறிக்கப்பட்ட மரக்கறிகளை உணவுத் தேவைகளுக்குப் பெற்றுக் கொள்ள முடியும். ஜப்பானில் எல்லாம் தொடர் மாடி வீடுகளில் தமது மரக்கறிகளைத் தாமே உண்டாக்கும் ஒரு பழக்கம் பலரையும் கவர்ந்துள்ளது.
வடபகுதியில் பெயர்பெற்ற பல பயிர்ச் செய்கையாளர்கள் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் உற்பத்திக்கு இலங்கையின் மத்திய மரக்கறி பரிவர்த்தனை நிலையமாக விளங்கக் கூடிய தம்புள்ள மார்க்கெட்டில் அமோக வரவேற்புக் கிடைக்கின்றது.
ஆனாலும் இவர்களின் உரப்பாவனை மற்றும் கிருமிநாசினி பயன்பாடு அளவுக்கு அதிகமாகவே காணப்படுகின்றது.
வாழைக்குலைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்கள் மிகச் சிறந்த இனங்களைப் பயிரிடுகின்ற போதிலும் அவற்றைப் பிஞ்சாக வெட்டி செயற்கை முறைகளில் பழுக்கச் செய்து விற்பனை செய்கின்றார்கள். இந்தப் பழங்கள் எந்தவித ருசியும் அற்றதாகவுள்ளன. ஏன் பிஞ்சாகவே வெட்டி எடுக்கின்றார்கள் என்பதற்குக் கூறப்படும் காரணம் கள்வர்கள் பயமாம். உண்மையில் எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணந்தான் இவர்களை இயக்குகின்றது.
எந்த விவசாயப் பொருட்களை எடுத்தாலும் அவை மக்களின உடல் நலத்திற்கு ஊறுவிளைவிப்பனவாக இல்லாமல் ஊட்டச் சத்துகளை வழங்கக்கூடியனவாக இருக்கத்தக்க வகையில் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை உரத்தில் பயிர் செய்யப்படும் பயிர் வகைகளுக்கு வெளிநாட்டிலும் அதிக கிராக்கி இருக்கின்றது. வெளிநாட்டில் செயற்கை உரத்தைக் குறைத்து இயற்கை உரத்தையும் செயற்கைக் கிருமிநாசினிகளுக்குப் பதில் இயற்கை உயிரியல் கிருமிநாசினைகளையும் பாவிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
செயற்கை உரங்களும் செயற்கைக் கிருமிநாசினிகளும் பாவிக்காது பயிரிடப்பட்ட உற்பத்திகளைக் கூடிய பணம் கொடுத்து வாங்குகின்றார்கள். ஆனால் பயிரிடுவோர் முறைப்படி சான்றிதழ் பெற்ற பின்னர்தான் இவ்வாறான உற்பத்திகளை வரவேற்றுக் கொள்முதல் செய்கின்றார்கள் வெளிநாட்டவர்கள் என்றார்