மஹிந்த ஹைட்பார்க் கூட்டத்தில் பங்கேற்பது பிழையான தீர்மானம்!

618

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பது ஒர் பிழையான தீர்மானமாகும் என காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியை வகித்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பது முற்றிலும் பிழையான தீர்மானமாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பினதோ கூட்டமொன்று ஹைட்பார்க் மைதானத்தில் இன்று நடைபெறவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என்ற ரீதியில் நாம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இரண்டு தலைவர்கள் கிடையாது. ஒரு தலைவரே இருக்கின்றார். அதனால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் தீர்மானங்களுக்கு அமையவே செயற்பட வேண்டும். ஒரே நபர் இரண்டு கட்சிகளில் இருக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்ற பதவிகளை பெற்றுக்கொடுக்க மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே வாக்களித்தனர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் கூட்டங்களை வைத்து சுதந்திரக் கட்சியின் வாக்குகளை திருட முயற்சிக்கின்றனர் என இராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

SHARE