நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான மற்றும் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
இரண்டு பிரதான கட்சிகளும் இரண்டு வருடங்களுக்கு இவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அந்தக் காலப்பகுதிக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளின் ஒரு சில அறிவிப்புக்களைப் பார்க்கும் போது எங்கே தீர்வு காணும் முயற்சி பலனற்றுப் போய்விடுமோ என்ற சந்தேகங்களும் ஏற்படுகின்றன.
குறிப்பாக தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, 2020ம் ஆண்டில் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதே எமது இலக்காகும்.
வெகுவிரைவில் மக்களுக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் நாம் தனித்த பயணத்தை ஆரம்பிப்போம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அதுமட்டுமன்றி, தேசிய பிரச்சினை தொடர்பில் எமக்கென்று ஒரு நிலைப்பாடு உள்ளது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எமது கட்சிக்கு மாற்றுக் கொள்கையும் உள்ளது.
அந்த கொள்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் தரப்பும் இணக்கம் தெரிவிக்குமாக இருந்தால் நாம் ஒன்றிணைந்து செயற்பட தயாராக உள்ளோம்.
இப்போது வரையிலும் 12 கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரின் கருத்தைப் பார்க்கும் போது எங்கே தேசிய பிரச்சினைக்கு தீர்வு ஒன்று எட்டாமலேயே கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைந்து விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இந்த விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் தமது சொந்த அரசியல் நலன்களை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் உறுதியுடன் செயற்படுவது தற்போதைய நிலைமையில் அவசியமான ஒன்றாகும்.
அதனை விடுத்து அரசியல்வாதிகள் தமது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் இவ்வாறு தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவில் இணைந்திருந்தால் அது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற பாரிய துரோகமாக அமைந்துவிடும்.
அந்தவகையில் இந்த தேசிய அரசாங்கம் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தேசிய பிரச்சினை தீர்வு என்ற ஒரே விடயத்திற்காக மட்டுமே தாம் கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியான ஒரு விடயமல்ல.
ஆனால் இரண்டு பிரதான கட்சிகளும் தற்போது இணைந்திருப்பதால் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அந்த சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிடக்கூடாது. எனது அரசியல் வாழ்க்கையில் நான் தொடர்ச்சியாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்து வந்துள்ளேன்.
எனவே தற்போதைய இந்த சந்தர்ப்பத்தை நான் மிகப்பெரியதொரு வாய்ப்பாகக் கருதுகிறேன். அதனால் அந்தவொரு காரணத்துக்காக கவலையுடனாவது நாங்கள் தேசிய அரசாங்கத்துடன் இணைந்திருக்கிறோம் என்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது இவ்வாறிருக்க, அண்மையில் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய அணுகுமுறையை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறு அனைத்துத் தரப்பினரும் தற்போதைய ஆரோக்கியமான அரசியல் சூழலைப்பயன்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காணவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
கடந்தகால வரலாற்றை எடுத்து நோக்கும் போது இரண்டு பிரதான கட்சிகளும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.
ஆட்சியில் இருக்கும் கட்சி தீர்வுக்கு முயற்சிக்கும் போது எதிர்த்தரப்பிலிருக்கும் கட்சி அதனை எதிர்ப்பதே வழமையாக இருந்து வந்துள்ளது.
இவ்வாறே இரண்டு கட்சிகளும் மாறிமாறி செயற்பட்டு வந்துள்ளன. அதனால் இறுதிவரை தீர்வை மக்களால் பெறமுடியாமல் போனது.
தற்போது வழமைக்கு மாறாக இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்துள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் ஒரு நிரந்தரமான – நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஆனால் இரண்டு பிரதான கட்சிகளும் இந்த விடயத்தை நோக்கி அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும். இரண்டு பிரதான கட்சிகளும் ஆட்சியில் இருப்பதற்காகவும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் மட்டும் தேசிய அரசாங்கத்தைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கக் கூடாது.
இதேவேளை தீர்வுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கம் நாட்டின் மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் சூழலை ஏற்படுத்தி வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.
இந்த விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு முயற்சிக்கப்படுமென குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையிலும் அரசாங்கமானது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்குபற்றிய சர்வகட்சி மாநாடு இரண்டு தடவைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் குறிப்பிடத்தக்க காலமாக சர்வகட்சி மாநாட்டின் செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
எனவே இந்தத் தீர்வு செயற்பாட்டிலான முயற்சிகளில் தேக்கநிலைமை ஏற்பட்டுள்ளதாகவே உணர முடிகின்றது.
கருத்தொருமைவாத தேசிய அரசாங்கமானது இரண்டு வருடங்களுக்கு இவ்வாறு உடன்பாட்டுடன் செயற்படும் என்றும் அதன் பின்னர் உருவாகும் அரசியல் சூழலுக்கு அமைய அதன் நீடிப்பு தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அரசியல் தீர்வு விடயத்தில் தற்போதைய தேக்க நிலையை நோக்கும்போது இரண்டு வருடகாலத்தில் தேசிய அரசாங்கத்தினால் தீர்வை நோக்கிப் பயணிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
எனவே தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.
தொடர்ந்து இந்த விடயத்தில் இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளாமல் விரைவாக நிரந்தர தீர்வைக் காண்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.
குறிப்பாக, தென்பகுதி மக்களுக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய முறையில் தெளிவுபடுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அதனைவிடுத்து, தென்பகுதி மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு விடுவார்கள் என்ற காரணத்தை முன்வைத்து அரசியல் தீர்வுச் செயற்பாட்டை தாமதித்துவிடக் கூடாது.
இது நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும்.
இரண்டு பிரதான கட்சிகளையும் கொண்ட தேசிய அரசாங்கம் தொடர்பில் சர்வதேச சமூகம் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறது.
அந்த நம்பிக்கையின் பிரகாரம் செயற்பாடுகளை முன்னெடுத்து சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.
அந்த வகையில் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளக்கூடியதுமான – பெரும்பான்மை மக்கள் புரிந்துகொள்ளக் கூடியதுமான தீர்வுத் திட்டத்திற்கு அரசாங்கம் செல்லவேண்டும்.
அவ்வாறு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை முன்வைக்கும் பட்சத்திலேயே சர்வதேசம் தேசிய அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.