கடந்த 15ம் திகதி யாழ்.போதனா வைத்தயசாலையில் கண் சிகிச்சை விடுதியில் நோயாளர் ஒருவரை பார்வையிடச் செனறிருந்த உறவினர் ஒருவர் குறித்த விடுதியில் நின்றிருந்த ஆண் தாதி ஒருவருடன் முரண்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த உறவினர் வைத்தியசாலை பொலிஸார் ஊடாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்த நிலையில் குறித்த ஆண் தாதியை வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்து பணிப்பாளருடன் பேசிய பொலிஸார் விடுதிக்குள்ளும் நுழைந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து விசாரணைக்கென குறித்த ஆண் தாதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து நீதிமன்றத்தில் முற்படுத்தியதுடன் 70 ஆயிரம் ரூபா காசு பிணையில் விடுதலை செய்துள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலை ஊழியருக்கு வைத்தியசாலை நிர்வாகம் பாதுகாப்பு வழங்கத் தவறியமை மற்றும், பொய் குற்றச்சாட்டை சுமத்தியவருக்கு நடவடிக்கை எடுக்காமையினை கண்டித்து தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியர்கள் இன்றைய தினம் முழுஅளவில் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் பொய் குற்றச்சாட்டை சுமத்திய நபர் தாதி உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தாதியர்கள் கோரியுள்ளனர்.
இதனால் போதனா வைத்தியசாலையின் சகல செயற்பாடுகளும் முடங்கிய நிலையில் மிக அவசியமான அவசர சிகிச்சை மட்டும் நடைபெறுகின்றன. இந்நிலையில் வெளிநோயாளர் பிரிவில். நோயாளர்கள் நிறைந்து வழிகின்றனர்.