மஹிந்த ஆதரவு தரப்பினால் திவுலபிட்டியவில் அமைச்சர்களுக்கு கடும் எதிர்ப்பு!

216

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரால், ஆளும் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திவுலப்பிட்டியவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்கவிருந்தார்.

கட்சியின் முக்கியஸ்தர்களான ரெஜினோல்ட் குரே, சரத் அமுனுகம, ருவான் ரணதுங்க போன்றவர்களுக்கு மக்கள் கூக்குரல் எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சந்திரிக்கா தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்காவின் மெய்ப்பாதுகாவலர்கள் கூட்டம் நடைபெற முன்னதாகவே அந்த இடத்திற்கு சென்றிருந்தனர் எனவும், எதிர்ப்பு காரணமாக கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என ஆலோசனை வழங்கியதாகவும், இதனால் சந்திரிக்கா கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், ரெஜினோல்ட் குரோ, சரத் அமுனுகம மற்றும் ருவான் ரணதுங்க போன்றவர்கள் உரையாற்ற முயற்சித்த போது கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை தென் மாகாண அமைச்சர் ஜீ.டி. ஆரியதிலக்க கூறிய போது, மஹிந்தவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் கேட்கத் தயாரில்லை, யார் பற்றியும் பேச வேண்டாம் என கட்சியின் ஆதரவாளர்கள் கூக்குரல் எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

காட்டிக் கொடுப்போர் ஆற்றும் உரைகளை கேட்க முடியாது என ருவான் ரணதுங்க மற்றும் ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கு எதிராக சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி ஆதரவாளாகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனால் திட்டமிட்டவாறு கூட்டத்தை நடத்தாது இடைநடுவில் கூட்டத்தை கைவிட நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE