உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்

334
வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.சர்வதேச அளவில் 50 பெரும் பணக்காரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்த 50 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 1.45 லட்சம் கோடி டொலராகும். இது ஏறக்குறைய அவுஸ்திரேலியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் 8,740 கோடி டொலர் சொத்து மதிப்புடன் அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார்.

அடுத்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அமேன்சியோ ஆர்டிகா கயோனா மற்றும் வாரன் பபெட் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு முறையே 6,680 கோடி டாலர் மற்றும் 6,070 கோடி டொலராக உள்ளது.

அமேசான் நிறுவனர் ஜெப்ரி பெசோஸ் 5,660 கோடி டொலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தையும், அமெரிக்காவைச் சேர்ந்த டைகூன் டேவிட் கோஷ் 4,740 கோடி டொலர் சொத்துடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். சார்லஸ் கோஷ் 4,680 கோடி டொலர் சொத்து மதிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.

லாரன்ஸ் எல்லிசன் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் முறையே ஏழு மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளனர்.

இவர்களின் சொத்து மதிப்பு முறையே 4,530 கோடி டொலர்  மற்றும் 4,280 கோடி டொலராக இருக்கிறது. மைக்கேல் புளும்பெர்க் 4,210 கோடி டொலர் சொத்து மதிப்புடன் ஒன்பதாவது இடத்திலும், இங்வார் கம்பிராட் 3,930 கோடி டொலர் சொத்துடன் பத்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.

SHARE