சுமித் மரணம் தொடர்பில் ஆணைக்குழு தீர்மானம்

273

எம்பிலிப்பிட்டிய இளைஞன் சுமித் ஜயவர்த்தனவின் சந்தேக மரணம் தொடர்பாக 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நேற்றைய கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு விசாரணை அறிக்கையை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்படவுள்ளதாகவும் ஆரியதாச குரே சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.சீ. தர்மதாசவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதற்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய நகரில் நடைபெற்ற விருந்து வைபவம் ஒன்றில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE