நியாயம் கூற வல்லவர்களை ஒன்றிணைக்க வேண்டும்!

246
Anurakumara
இலங்கை ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. அது பல்லின மக்களுக்கும் சொந்தமானது. இவ்வாறு பகிரங்கமாகக் கூறியவர் ஜே.வி.பி என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.

கொழும்பில் நடைபெறும் கம்பன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜே.வி.பி என்ற அமைப்புத் தொடர்பில் தமிழ் மக்கள் கொண்ட கருத்தியல் வித்தியாசமானது. அந்த அமைப்பின் முன்னைய தலைவர்கள் ஜே.வி.பியை ஒரு பேரினவாத அமைப்பாகவே காட்டி வந்துள்ளனர்.

எதற்கெடுத்தாலும் தமிழினத்துக்கு எதிராக கருத்துக் கூறுகின்ற -எதிராக செயற்படுகின்ற போக்கே ஜே.வி.பியிடம் இருந்துள்ளது.

ஆனால், அநுரகுமார திஸாநாயக்க அதன் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், அந்த அமைப்பிடம் நடுவுநிலை தன்மையும் பரந்த நோக்கும் இருப்பதை காணமுடிகிறது.

இலங்கை ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. அது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சொந்த மான நாடு என பாராளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பி யின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் தலைநகர் கொழும்பில் வைத்துக் கூறியுள்ளார் எனில் அது சாதாரணமான விடயமன்று.

இனவாதம் பேசக்கூடிய ஜே.வி.பி என்ற அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.

சிங்களவர்கள் என்றாலே அவர்கள் தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்ற நினைப்பை விடுத்து சிங்களவர்களிலும் நியாயம் உரைக்க வல்லவர்கள் உள்ளனர்.

எனவே, அவர்களை ஒன்றிணைக்கும் பணியை தமிழ் அரசியல் தலைவர்கள் செய்தாக வேண்டும்.

பொதுவில் தமிழர்கள் தொடர்பில் சிங்களவர்களும்; சிங்களவர்கள் தொடர்பில் தமிழர்களும் எதிரான சிந்தனைப் போக்கை கொண்டுள்ளனர். இதற்கு அரசியல்வாதிகளும் இனவாத ஊடகங்களுமே காரணமாக உள்ளன.

இத்தகைய நிலைமையை உடைத்தெறிய வேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

மறைக்கப்படுகின்ற உண்மைகளை எடுத்துக் கூறுவதற்கான ஏற்பாடுகளை செய்கின்ற போதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வில் சிங்கள மக்களின் ஒத்துழைப்பை பெறமுடியும்.

இருந்தும் அந்த முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. இந்த முயற்சியில் தமிழ்த் தரப்போ அல்லது அரச தர ப்போ ஈடுபடுவதாகவும் இல்லை.

இத்தகையதோர் நிலைமையில்தான் இனப்பிரச்சினைத் தீர்வு என்றவுடன் தென்பகுதியில் எதிர்ப்புத் தோன்றுகின்றது.

ஜே.வி.பி என்ற மிகமோசமான பேரினவாத அமைப்பு இன்று திருத்தமுற்று இலங்கை ஓர் இனத்துக்கு அதாவது சிங்கள இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று கூறும் அளவிற்கு தன்னை மாற்றியுள்ளது எனில் அந்த அமைப்பு சார்ந்தவர்களை தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களின் பலமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

எவரையும் பகைவர்களாக, சந்தேகத்துக்குரியவர்களாக பார்ப்பதானது ஒருபோதும் அமைதியை, சமாதானத்தை தரமாட்டாது.

மாறாக நேரிய சிந்தனை உடையவர்களை ஒன்றிணைக்கும் போதுதான் எதிர் சிந்தனை உடையவர்களையும் நேர் சிந்தனை உடையவர்களாக மாற்ற முடியும்.

அந்த வகையில் தமிழ் இலக்கிய நிகழ்வான கொழும்பு கம்பன் விழாவில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சிறப்பு விருந்தினராக அழைத்து அவருக்கு உரையாற்றுகின்ற சந்தர்ப்பத்தை வழங்கிய போது தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் தெட்டத்தெளிவாக உறுதிபடக் கூறியிருந்தார்.

தமிழ் மக்கள் வாழுகின்ற இடங்களில் சிங்களப் பொலிஸாரை நியமித்து தமிழர்களின் முறைப்பாடுகளை சிங்களத்தில் பதிவு செய்வது எங்ஙனம் நியாயமாகும் என்ற கேள்வியை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேட்டார் எனில் இதுதான் மிகப் பெரும் வெற்றி எனலாம்.

தமிழர்கள் கூற வேண்டிய நியாயத்தை சிங்களவர்களே கூறும் போது எல்லாம் சரியாகி விடும் என்பதால் நியாயம் கூறவல்ல சிங்களவர்களை தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களின் பலமான சக்தியாக ஆக்கிக் கொண்டு இராஜதந்திரமாக செயற்படும் போது இலக்கு மிக எளிதாக அடையப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

SHARE