நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தாலும் மின்வெட்டு நடக்காது! அமைச்சர் சியம்பலாப்பிட்டிய

343
நீர்த்தேக்கங்களில் தேக்கப்பட்டிருக்கும் நீர்மட்டம் குறைந்துபோனாலும் அதனை முன்னிட்டு மின்வெட்டு நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
tgb

வடக்கு மாகாண பாடசாலை மட்ட மின்சக்தி கழகங்களை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று வவுனியா மகாவித்தியாலத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மழைவீழ்ச்சி இன்மை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் அண்மைக்காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை மறுத்துள்ளார்.

மழையின்மை காரணமாக நீர்மட்டம் குறைந்து மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டாலும் தேசிய மின்வழங்கலில் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வெப்ப காலநிலை காரணமாக மின்பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் அதனை முகாமைத்துவம் செய்து கொண்டு மின்வழங்கலை தடையின்றி முன்னெடுக்கும் வகையில் மின்சார சபை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE