இலங்கையின் யுத்த வரலாற்றில் காணாமற்போனோர் விபரங்களைத் திரட்டுதல் தொடர்பாக யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற மாவட்டங்களில் பதிவுகளை திரட்டும் நடவடிக்கை இவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நோக்கிலேயே ஜனாதிபதியின் காணாமற்போனோர் ஆணைக்குழு செயற்பட்டுவருகின்றது. இவர்கள் தொடர்பாக வடகிழக்கில் 25இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அத்துடன் 15இற்கும் மேற்பட்ட மகஜர்கள் உரியவர்களுக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது. உண்ணாவிரதப் போராட்டங்கள் கூட மேற்கொள்ளப்பட்டது. வெறுமனே இவையணைத்தும் ஒரு பொழுதுபோக்காக நடைபெற்ற சம்பவங்களாகவே அரசாங்கம் கருதுகிறது.
கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசு செய்த தவறை திருத்தி அதனுடைய குறைபாடுகளை மீளவும் நிவர்த்தி செய்து வருவதாகக் கூறிக்கொள்ளும் மைத்திரி-ரணிலினது கூட்டரசாங்கம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனது காதில் பூவினை வைத்துள்ளது. இவர்களுடன் இணைந்த ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்து குழல் வாசிக்கிறார்கள். அதாவது விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தனின் மகுடிக்கு ஏனையோர் ஆடியாகவேண்டும். இல்லாவிட்டால் த.தே.கூட்டமைப்பிலிருந்து விலக்கப்படும் நிலைமையே தோற்றுவிக்கப்படும். படுகொலைகள், ஆட்கடத்தல் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை கடந்த அரசாங்கம் செய்துள்ளபோதிலும் இதனை மூடிமறைத்து சர்வதேசத்தில் ஒற்றுமையாக வாழ்வதாகக் காண்பிப்பதற்காக காணாமற்போனோர் ஆணைக்குழு என்ற போர்வையில் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் இந்த ஆணைக்குழு செயற்பட்டுவருகின்றது. இதுவரை இந்த ஆணைக்குழுவினால் சாதிக்க முடிந்தது என்ன? அவ்வாறாகவிருந்தால் மீண்டும் தமிழ் மக்களை துன்பகரமான நிலைக்கு உட்படுத்துவதும், அவர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்வதை இந்த த.தே.கூட்டமைப்பும் அதன் தலைமையும் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது.
இந்த நாட்டில் வாழ முடியாது எனக்கூறி காணாமற்போனோர் ஆணையத்தில் முறையிட்ட பலர் வெளிநாடுகளில் வசித்துவருகின்றனர். இன்னும் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றார்கள். அப்பாவிகளாக இருக்கக்கூடிய ஒருசில மக்களே எதுவுமின்றி இந்நாட்டில் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். இந்நிலைமை மாற்றப்படவேண்டும். காணாமற்போனோர் ஆணைக்குழுவினது நடவடிக்கைகள் ஆரோக்கியமாக அமையாதவிடத்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி த.தே.கூட்டமைப்பு ஏற்கனவே சிந்தித்திருக்கவேண்டும். நடைமுறையில் சாத்தியமற்ற ஒருவிடயத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது இந்த ஆணைக்குழு. சிங்கள உயர்மட்ட அதிகாரிகள் ஆணைக்குழு என்ற போர்வையில் வெள்ளைப்புறாவினை முன்னே அனுப்பி, உள்ளே பாம்பின் விஷத்தினை வைத்து தமிழினத்திற்கான தீர்ப்பினை எழுத முயற்சித்து வருகின்றனர்.
ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளதாகக் கூறப்படும் அதேநேரம், அதற்கான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தினாலேயே உரியவர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றது. உண்மையான ஆதாரங்களைத் திரட்டுவது என்பது அரசிற்கு பாரியதொரு விடயமல்ல. கிராம சேவையாளர் மட்டத்திலிருந்து இந்தத் தரவுகள் திரட்டப்பட்டு பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் வாயிலாக இந்தத் தரவுகளை ஒழுங்கமைக்க முடியும். அதனைவிடுத்து மாதத்திற்கு மாதம் காணாமற்போனோர் ஆணைக்குழு, மனித நேய அமைப்புக்கள், போராளிகள் கட்சி என இவ்வாறு பலரிடமிருந்து தரவுகளைத் திரட்ட முனைகிறார்கள்;. ஆனால் இவர்களால் இது முடியாத காரியம். கிராம சேவையாளர் மட்டத்திலிருந்து இந்த காணாமற்போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது. வடகிழக்கு மாகாணசபைகளில் கிட்டத்தட்ட 50இற்கும் மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தலா ஒருவருக்கு 1000பேரின் தரவுகள் என்றாலும் கூட 50000 நபர்களின் தரவுகளைத் திரட்ட இயலும். இவ்வாறான செயற்பாடுகளை அரசு ஏன் நடைமுறைப்படுத்தவில்லை. நடைமுறையில் சாத்தியமான விடயத்தினை நடைமுறைப்படுத்தி காணாமற்போனோர் விவகாரத்தில் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தொடர்பாக ஒரு தீர்வினை மக்களுக்கு வழங்குவதன் ஊடாக இந்நாட்டை சுமுகமான பாதையில் கொண்டுசெல்லலாமே தவிர, காலத்திற்குக்காலம் காணாமற்போனோரைக்கொண்டு செய்யும் அரசியலை விட்டுவிட்டு ஆரோக்கியமான விடயங்களை மேற்கொள்வதே சிறந்தது. இதனோடு ஒன்றினைப் புரிந்துகொள்ள முடியும். என்னவெனில் ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதேயாகும்.