மோசடி செய்த செங்கலடி பிரதேச சபை செயலாளரை மாற்றுக: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

260
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அச்செயலாளரின் நிர்வாக மந்த நிலையைக் கண்டித்து பிரதேச சபைக்கு முன்பாக இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் பிரதேச சபை முன்றலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மோசடி செய்த செங்கலடி பிரதேச செயலாளரை உடனடியாக மாற்றம் செய்யவும், விவேகமில்லாமல் கடமையாற்றும் செயலாளரே உடனடியாக வெளியேறு, நடத்து, நடத்து ஊழலுக்கொதிரான விசாரணையை நடத்து, துடிக்காதே துடிக்காதே ஊழியர்களை பழிவாங்கத் துடித்தாகதே, போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் கோசமிட்டு பிரதேசபைக்கு முன்பாக ஒன்றுகூடினர்.

உள்ளூராட்சி நிர்வாகத்தினால் செய்து முடிக்கப்பட வேண்டிய பல கருமங்களை குறித்த செயலாளர் செய்து முடிக்காது வினைத்திறனற்ற முறையில் காலம் கடத்துவதாகவும் அதனால், இந்த பிரதேச சபைப் பிரிவில் பல வகையான நிர்வாகச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

குறித்த செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்து வினைத்திறனுள்ள ஒருவரை செயலாளராக நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், குறித்த பிரச்சினை தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மக்களின் கோரிக்கைக்கிணங்க வினைத்திறனுள்ள செயலாளர் நியமிக்கப்பட வேண்டுமெனக் கூறினார்.

அங்கு வந்த மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் தெரிவிக்கையில், ‘நிர்வாக ரீதியான நடைமுறைகளுக்கேற்ப பொதுமக்களின் கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படும்.

மேலும்  இப்பிரதேச சபைச், செயலாளருக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்துள்ளபோதும்இ நிர்வாக ரீதியான நடைமுறைகளுக்கேற்ப அவர் மேன்முறையீடு செய்துள்ளார். அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

SHARE