மின்சார கதிரை என்ற சொல் அகராதியிலேயே காணாமல் போயுள்ளது! ஜனாதிபதி பெருமிதம்

256
ஐக்கிய நாடுகள் சபையின் மின்சார கதிரை என்ற சொல்லானது அகராதியிலேயே இல்லாமல் செய்து விட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
maithrim-kk-720x4801

நாரம்மல மயுரபத வித்தியாலயதத்தில் நேற்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட போதே ஜனாதிபதி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

மயுரபத வித்தியாலயத்திற்கு வருகைத் தருவதில் பெருமகிழ்ச்சி அடைவதோடு, இந்த வாய்ப்பைத் தந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவிற்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் பரிசளிப்பு விழா நடைபெறுவது பரீட்சைகளில் திறமையாக சித்தியடைந்தோரையும், விளையாட்டு மற்றும் ஏனைய பாடசாலை மட்ட போட்டிகளில் சிறப்பித்தவர்களை கௌரவிப்பதற்காகவும் நடைபெறுகிறது.

இதனால் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளும் பிள்ளைகள் மேலும் ஊக்கப்படுத்தப்படுவதோடு, ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்குகின்றனர்.

அத்துடன் குறித்த பரிசளிப்பு விழாக்கள் மூலம் பெற்றோரினதும், ஆசிரியர்களினதும் ஊக்குவிப்பு மற்றும் தியாகங்கள் வெளிவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக இந்த பாடசாலையும் விளங்குகின்றது. இதனால் தான் இந்தப் பாடசாலைகளில் கல்வி கற்றோர் இன்று தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்று விளங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சிறந்த எதிர்கால சந்ததியினர் உருவாக வழிவகுக்கும் பாடசாலையின் கல்வியை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இலங்கையின் இலவசக் கல்வி ஊடாக நாட்டின் அனைவரும் கல்வி கற்க பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் உலகையே வெற்றிக் கொள்ள வந்தவர்கள். பொலன்னறுவைக்கு அடுத்து உருவான தம்பதெனிய இராஜதானியின் வாரிசுகளான நீங்கள் நாளைய நாட்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று சிறிய வகுப்பறைக்குள் ஆரம்பமாகும் உங்கள் கல்வி நடவடிக்கைகள் நாளை பிரதேசங்கள், மாவட்டம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரந்து காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மார்ச் 28ஆம் திகதி இன்றைய நாள் ஒவ்வொரு வருடமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நாள். ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையானது கூடும் நாள் இது தான். இங்கு இலங்கை தொடர்பான பிரச்சினைப் பற்றியும் பேசப்படும் என்பதால் எம்மவர்கள் இந்த நாளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வரும் விசாரணைக்கு எமது அரசாங்கமும் சென்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவிருந்த மின்சார கதிரையை இல்லாமல் செய்தோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்றைய உலக நாடுகள் அனைத்தும் எமது நாட்டில் ஜனநாயகம், அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம் உள்ள நாடாக எமது நாட்டைப் பார்க்கின்றன. அதற்கு காரணம் எமது அரசாங்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எமது இராணுவ வீரர்களுக்கு சர்வதேசத்தில் தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுவந்ததோடு நாம் அவற்றை இல்லாது செய்து இராணுவ வீரர்களின் கௌரவத்தை காப்பாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE