அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதை அடுத்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமான வெள்ளை மாளிகை தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ளது.
இந்த வெள்ளை மாளிகை வளாகத்தினுள் அமைந்துள்ள பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மர்ம நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்துள்ளனர். வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பிடிபட்ட நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பொதுமக்கள் பீதி அடையத்தக்க சம்பவம் இல்லை எனவும் இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியின் சில மீற்றர்கள் தொலைவில்தான் ஜனாதிபதி ஒபாமா ஈஸ்டர் விழா சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துக்கொண்டிருந்தார். மேலும் அந்த விழா நடைபெற்ற பகுதியில் சுமார் 35,000 பொதுமக்கள் குழுமியிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |