நீர்கொழும்பில் முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடிய கோத்தபாய!

256
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை விஜயம் செய்து பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த மக்கள் சந்திப்பு போருதொட்ட தக்கியா வீதியில் இடம்பெற்றது.

மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கடந்த அரசாங்கக் காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் அங்கு வாழ் முஸ்லிம் மக்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வினவினர்.

இந்த நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா அங்கு உரையாற்றுகையில்

பொதுபலசேனாவின் பிரச்சினை காரணமாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் கடந்த தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார்.

இந்த சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் நேரடியாகவே இது தொடர்பாக பொது மக்கள் தமது சந்தேகங்களை கேட்கலாம் என்றார்.

இந்நிலையில் அங்கு வருகை தந்திருந்த மக்கள் தமது கேள்விகளை கேட்டதன் பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதற்கு பதிலளித்து உரையாற்றுகையில்

பொது பலசேனாவுடன் இருந்த பௌத்த மக்கள் தற்போது கடும் கோபத்தில் உள்ளனர். பொது பலசேனாவின் செயற்பாடுகள் காரணமாகவே சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோற்றார் என்று இன்று பௌத்த மக்கள் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.

தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினையில் பொது பலசேனா சம்பந்தப்படவில்லை.

அளுத்கமையில் இதற்கு முன்னரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் அப்போது அதனை யாரும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தவில்லை.

கிரீஸ் பூதம் பிரச்சினையிலும் என் மீது பழி போடப்பட்டது.

அன்று எமது அரசாங்கத்தில் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களுக்கு உண்மை நிலைமையை எடுத்துக் கூறவில்லை. இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் என் மீது சந்தேகப்பட்டனர் என்றார்.

SHARE