கிழக்கிலங்கையின் அம்பாறை மண் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு உரமிட்டு வளர்த்த மண்ணாகும். அதிலும் குறிப்பாக கல்முனை, பொத்துவில் பகுதிகள் முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகளாகும்.
எனினும் இங்குள்ள மக்களின் துன்ப, துயரங்களில் அக்கட்சியினர் ஒருபோதும் பங்கேற்பதோ, தேவையான உதவிகளை வழங்குவதோ இல்லை.
இந்நிலையில் மிக நீண்ட காலமாக நரம்புபாதிப்பு நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்த பொத்துவில் கவிஞர் மஜீத்தின் வீடு தேடிச் சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன், கவிஞரின் மருத்துவச் செலவுக்காக ஐந்து இலட்சம் ரூபாயை அன்பளிப்புச் செய்துள்ளார்.
அத்துடன் குறித்த உதவி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் கவிஞரின் மனதை நோகடித்துவிடக் கூடாது என்பதற்காக கவிஞரால் வெளியிடப்பட்ட நூல் ஒன்றைக் கொள்வனவு செய்து அதற்கு வழங்கும் விருதாக இத்தொகையை அமைச்சர் அன்பளிப்புச் செய்துள்ளார்.
இதன் மூலம் கவிஞர் மஜீத் தனது மேலதிக சிகிச்சைகளுக்காக இன்று இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கவிஞர் மஜீதின் சிகிச்சைகளுக்கான மேலதிக நிதியை ஏற்பாடு செய்து கொடுப்பதில் சர்வதேசப் புகழ்பெற்ற ஈழத்துப் பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் முன்னின்று செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவரது வேண்டுகோளுக்கு அமைய புலம்பெயர் தேசத்திலிருந்தும் பலர் குறித்த மருத்துவ உதவிக்கான தொகையை அன்பளிப்புச் செய்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.