காணாமல் போனதாக கூறப்பட்ட நால்வர் கண்டுபிடிப்பு: மாலைதீவு சிறையிலும் சிலர்! மெக்ஸ்வெல்

211
maxwell_1
காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இரண்டு, மூன்று பேர் மாலைதீவு சிறையில் இருப்பதாகவும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான சாட்சியமளிப்பு அமர்வு நிறைவு பெற்ற பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அதில் தெரிவித்ததாவது,

காணாமல் போனோர் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடுகள், சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அது தொடர்பில் விரைவில் வெளிப்படுத்துவோம்.

மாலைதீவு சிறைச்சாலையிலும் காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு, மூன்று பேர் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வெலிஓயாப் பகுதியில் காணாமல் போனதாக எம்மிடம் கூறப்பட்ட நபரொருவர் வேறு ஒரு பெண்ணுடன் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக வெளிநாடு சென்றமை அறியப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் போனோர் முழுமையாக கண்டு பிடிக்கப்படா விட்டாலும் சாதகமான பதில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாட்சியப் பதிவுகளில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கு அதிகமான முறைப்பாடுகள் காணப்பட்ட அதேவேளை, வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகம் பதிவாகியுள்ளது.

இது தவிர காணாமல் போனோர் தொடர்பில் புளொட், ஈபிஆர்எல்எப், டக்ளஸ் அவர்களின் ஈபிடிபி போன்றனவர்களும் பதில் சொல்ல வேண்டியவர்களாகவுள்ளனர்.

தற்போது வன்னியில் ஆறு நாட்கள் மேற்கொண்ட அமர்வுகளில் 1049 பேர் சாட்சியமளித்ததுடன், 306 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.

அந்தவகையில் புதிதாக விண்ணப்பிப்போர் தொகை அதிகரித்துள்ளது.

இது மக்கள் எமது காணாமல் போனோர் ஆணைக்குழு மேல் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இது தவிர, ஒருவர் தொடர்பாக அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல பகுதிகளில் இருந்தும் விண்ணப்பித்துள்ளமையால் காணாமல் போனோர் தொடர்பான மொத்த எண்ணிக்கையை உடனடியாக வெளியிட முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

SHARE