முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் குமார் குணரத்தினத்துக்கு வீசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதுடன் குடிவரவு திணைக்களத்தின் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களே அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பொலிசார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனினும் பொலிசாரே தமது கைகளில் இருந்த பெட்டன் தடிகளால் குடிவரவுத் திணைக்களத்தின் கண்ணாடிகளை உடைத்து அதன் மீது தமது கட்சி உறுப்பினர்களை இழுத்துப் போட்டு தாக்கியதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் புபுது ஜாகொட குற்றம் சாட்டியுள்ளார்.
தமது கட்சியினரின் கைகளில் பேனர் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை என்று வலியுறுத்தியுள்ள அவர், பொலிசார் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது மட்டுமன்றி தமது கட்சி உறுப்பினர்கள் கடுமையாக காயமடையும் வகையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீசா மற்றும் கடவுச்சீட்டு விவகாரத்தில் அர்ஜுன் மகேந்திரன், விமல் வீரவங்ச ஆகியோருக்கு ஒரு சட்டமும் தமது கட்சியின் செயற்பாட்டாளர் குமார் குணரத்தினத்துக்கு வேறொரு வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதும் குறித்து வினாத் தொடுக்கவே தாம் குடிவரவுத் திணைக்களத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.