வடக்கு கிழக்கில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பில் பணிபுரியும் 8 பெண்கள் அமைப்புகளின் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு, கடந்த மார்ச் 29, 2016 இல் நடைப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய செயலமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர வின் விவாதங்களை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வரவேற்பதோடு பாராட்டுகிறது.
இச்செயலமர்வில் முஸ்லிம் விவாஹ விவாஹரத்து சட்டத்தின் மூலம் முஸ்லிம் ஆண், பெண் பிள்ளைகளை 18 வயதிற்கும் குறைந்த வயதில் திருமணம் செய்ய இடமளிப்பது தொடர்பாக அவர் கேள்வியெழுப்பினார்.
அவர் இது குறித்து வினவியது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் (பிரிவு 363) பிரகாரம் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையுடன் (அவளின் அனுமதியுடனோ அல்லது அனுமதியில்லாமலோ) பாலியல் உடலுறவு கொள்ளுதல் நியதிச்சட்ட ரீதியான பாலியல் வன்புணர்வாகும் என்பதின் அடிப்படையிலேயே. முஸ்லிம் இளவயது திருமணம் தொடர்பான வரைபு இச்சட்டத்திற்கு புறம்பானதாக இருப்பதால் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் அக்கறையுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சிறுபான்மை முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் முகம்கொடுக்க நேரிடும் நடைமுறை மற்றும் எதிர்கால பிரச்சினைகள் குறித்த அச்சத்தை வெளிப்படுத்துவதாக ஹிருனிகாவின் விவாதம் அமைகிறது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்த விடயம் தொடர்பாக பலதரப்பட்ட தளங்களில், மத தலைவர்கள் மற்றும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக கேள்வியெழுப்பப்பட்டும் கூட இளவயது திருமணங்கள் முஸ்லிம் சமூகத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதாக கூறி வழமையாகவே இவ்விடயம் பறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.
எனினும் சமூக மட்டத்தில் நெருங்கி பணிபுரியும் முஸ்லிம் பெண்கள் குழுக்கள் இளவயது திருமணம் தொடர்பான பல பிரச்சினைகளை அன்றாடம் சந்தித்து வருகின்றனர். அதிகபட்ச இளவயது திருமணங்கள் மட்டக்களப்பு, புத்தளம் மாவட்டங்களிலும் கொழும்பில் சில பகுதிகளிலும் பதிவாகியுள்ளன.
சில பகுதிகளில்; 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு இளவயது திருமணங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் திருமணங்கள் தொடர்பிலான விவாஹ பதிவுகளை எடுத்து நோக்குவோமாயின் இது தொடர்பிலான தரவுகளையும் எண்ணிக்கைகளையும் விபரமாக காணக்கூடியதாக இருக்கும்.
அதிகமான இளவயது திருமணங்களின் போது இளம் பெண் பிள்ளைகள் விவாகத்துக்காக பாடசாலையில் இருந்து இடை நிறுத்தப்படுகிறார்கள். இதனால் இளவயது திருமணங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பை மறுப்பதோடு, பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளையும் மறுக்கிறது.
இது தவிர குறிப்பாக பெண் பிள்ளைகள் அவர்களது வயது, மகப்பேறு மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்பு, பாலியல் ரீதியான வன்முறைகள், விவாகத்தில் ஏற்படும் தொந்தரவுகள், விவாகரத்தின் போது ஏற்படும் பொருளாதார பிரச்சினைகள் அல்லது கணவனால் தகுந்த பராமரிப்பு வழங்கப்படாமை போன்ற விடயங்களில் அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கப்படுபவர்களாக உள்ளனர்.
திருமணத்திற்காக வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது சிறுவர் உரிமைகள் குறித்த முக்கியமான பிரச்சினையாகும் என்பதை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு பரிந்துரைக்கின்றது.
சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்தல் ஒரு நாட்டின் அரசினுடைய கடைமையே ஒழிய குறித்த ஒரு சமூத்தின் தனிவிருப்பத்திற்கமைய இதனை விட்டு வைத்தலாகாது.
இதனால், பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவினுடைய வினவலுக்கு எதிரான வாதத்தை முன் வைத்த அமைச்சர் ராஹுப் ஹகீம், திருமண வயது தொடர்பான அக்கறை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட சீர்திருத்தத்தினூடாக முஸ்லிம் சமூகத்தால் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டதையிட்டு நாங்கள் மிகுந்த மனக்கசப்பிற்குள்ளாகியுள்ளோம்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திற்கான சீர்திருத்தம் 64 வருடங்களுக்கு மேலாக கெடுவில் உள்ளது. அத்தோடு இச்சட்டத்துக்கு சீர்திருத்தத்தினை கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த தன் அமைச்சு காலத்தில் ரஹுப் ஹகீம் அவர்கள் மிகச்சிறிய அளவிலான நடவடிக்கையினையே மேற்கொடுள்ளார் என்பது குறித்து நாம் கவலையடைகிறோம்.
2009 ஆம் ஆண்டு நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்த குழு ஒன்றை தொடக்கி வைத்திருந்ததை நாம் அறிவோம்.
எனினும் இக் குழு கடந்த 7 ஆண்டுகளில் மேற்கொண்ட எதுவித சீர்திருத்த முன்னேற்றங்களையும் நாம் அறியோம். முஸ்லிம் சமூகத்தில் அனைத்தவருக்கும் இக்குழுவின் வேலைத்திட்டங்கள் குறித்தோ, இக்குழுவின் அறிக்கை எப்போது அரசாங்கத்துக்கு சமர்பிக்கப்படும் என்பது குறித்தோ, இக்குழுவின் பரிந்துரைகள் மூலம் நாட்டின் ஏனைய சிறுவர்களை போல முஸ்லிம் சிறுவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுமா என்பது குறித்தோ மிகக் குறைவான விபரங்களே வெளிப்படையாக உள்ளன.
இந்த விடயங்களையும் சீர்திருத்தங்களுக்கு ஏற்படும் தாமதங்களையும் கருத்தில் கொண்டு முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் கீழ் அநீதியை சந்தித்த பல முஸ்லிம் பெண்கள் புத்தளம், வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பாக மக்களது பரிந்துரைகளை பெறும் குழுவின் மாவட்ட மட்ட விசாரணைகளுக்கு சமூகமளித்துள்ளனர்.
அவர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் உடனடி மாற்றங்களை கொண்டு வர கோரியும் அப்படி இல்லையெனில் இலங்கை பொது விவாக சட்டத்தின் கீழ் அவர்களுக்கு விவாகப் பதிவுகளை மேற்கொள்ளும் விருப்பத்தேர்வை வழங்கும் படி கோரியும் வாய் மூலம் மற்றும் எழுத்து வடிவிலான வாக்குமூலங்களை கொடுத்துள்ளனர்.
பழைமைவாய்ந்த முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின்; கீழ் இலங்கை முஸ்லிம்களின் விவாக விவாகரத்துகள் கையாளப்படுவது அதி பிரச்சினைக்குரிய விடயமாகும்,
குறிப்பாக இச்சட்டம் முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பல விதங்களிலும் மீறுவதால் (உதாரணமாக இளவயது திருமணத்திற்கு இடமளித்தல்). இலங்கையின் அடிப்படை உரிமைகள் அனைத்து பிரஜைகளுக்கும் சமனானதாக இருக்க வேண்டுமே ஒழிய சிறுபான்மை தனியாள் சட்டவாக்கத்துக்கு கட்டுப்பட்டதாக இருக்க கூடாது.
இது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் அடையாளப்படுத்தப்பட வேண்டிய ஒரு இன்றியமையாத காரணியாகும்.
நாம் மீண்டும் வழியுறுத்த விரும்புவது திருமணம் தொடர்பான வயதெல்லை என்பது ‘முஸ்லிம் பிரச்சினை’ அல்ல மாறாக அது மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பானது.
சிறுவர் உரிமைகள் சமவாயம் (CRC), பெண்களுக்கு எதிராக எல்லா விதமான பாராபட்சங்களையும் ஒழிக்கும் சமவாயம் (CEDAW) போன்ற பல சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களாலும் வேறு சர்வதேச பொறுப்புகூறல்கள் காரணமாகவும் சிறுவர் உரிமைகளை பின்பற்றுவதற்கும் அமுழாக்கவும் சர்வதேச அளவுகோல்களுக்கு அமைவாக செயற்பட இலங்கை கட்டுப்பட்டுள்ளது.
இவ்வாறான உரிமைகள் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் சென்றடைய வேண்டும். சிறுபான்மை இன பெண்கள் இவ்வுரிமைகளில் இருந்து மறுக்கப்படலாகாது.
அதற்கமைவாக 2010 இல் பொருளாதார, சமூக, காலாச்சார சமவாயத்திற்க்கான குழு தனது நாற்பத்தி ஜந்தாவது அவர்வில் நியதிச்சட்டப்படியும் தனியாள் சட்டப்படியும் 12 வயதேயான பெண் பிள்ளைகளை கூட திருமணம் செய்ய இடமளிப்பது பெண்களை வேற்றுமைபடுத்துவதாகவும் அவர்களது பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை தடைசெய்யும் நடவடிக்ககை என்பதையும் இலங்கைக்கு அறிவுறுத்தியிறுந்தது.
அவர்கள் மேற்கொண்டு குறிப்பிட்டதாவது ‘…இது அரச தரப்பினரின் உடனடி பொறுப்பு, இது வேறு சமூகங்கள் தமது சட்டங்களை மாற்றியமைக்க தெரிவிக்கும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அமையலாகாது…’
அதனால் ஏனைய இலங்கை பிரஜைகளை போலன்றி ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்துக்கு மாத்திரம் வேறுபட்ட திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்படுதல் முன்பின் முரணான விடயமாகும்.
எனவே இந்த பாரபட்சமான செயற்பாடு மேலும் பல அமைச்சர்களால் வினவப்பட வேண்டிய விடயமாகும். மேலும் இவ்வாறான அரச சட்டங்களுக்கு கீழ் காணப்படும் பாரபட்சங்கள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற ஸ்தாபனங்களால் நடவவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு பல அரசியல் சமூக தலைவர்கiளை சிறுபான்மை சமூகங்களின் நிலைமைகளை புரிந்துகொள்ள முயற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கும் அதேசயம் இந்த அறிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்தி உரிமை மீறல்கள் தொடர்பாக கேள்வியெழுப்புமாறும் வேண்டுகிறது.
புரிந்துணர்வுக்கும் அழைப்பு விடுக்கும் அதேசமயம், நாம் வலியுறுத்த விரும்புவது ‘கலாச்சார உணர்வு’ என்ற பேர்வையின் கீழ் முக்கியமாக பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரவும் கேள்வியெழுப்பவும் மறுக்கவேண்டாம்.
ஏதேனும் ஒரு பிரஜையின் உரிமை மீறல் தொடர்பில் செயலாற்றவும், இன, மத, குல மற்றும் பாலியல் அடிப்படையில் வேற்றுமைகளை மேற்கொள்ளாது நாட்டின் அனைத்து பிரஜைகளையும் சமமாக நடாத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினருக்கும் கடமையுண்டு என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.