உரிமைப் பத்திரங்கள் எங்கள் இனத்தின் இருப்பிற்கான ஆதாரங்கள் – சிறீதரன் எம்.பி

261
கிளிநொச்சி மாவட்டத்தின் கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாக குடியிருந்து வருகின்ற மக்களுக்கான காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 31ம் திகதி காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொண்டமான் நகர், செல்வாநகர் , புதுமுறிப்பு, கிருஸ்ணபுரம் ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற 667 பயனாளிகளுக்கு காணி உரிமைப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு, கரைச்சிப்பிரதேச செயலாளர் நாகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நீங்கள் உங்களுடைய காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை பெறுவதற்காக காத்திருந்து போராடி இவ் ஆவணங்களை பெறுகிறீர்கள்.

நில உரிமையை பெற்றுக்கொள்ளுதல் மிக முதன்மையானது. எங்களுடைய இருப்பை எமது சந்ததியுடைய இருப்பை எமது இனத்தினுடைய இருப்பை உறுதிப்படுத்துவதில் இந்த ஆவணங்கள் ஆதாரமாக திகழ்கின்றது.

வரலாற்றில் இந்த மண்ணுக்குரிய சொந்தமானவர்கள் நாம் என்பதையும் இந்த நிலங்களை ஆழவும் வளப்படுத்தவும் உரிமை கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்தச்சட்ட பூர்வமான ஆவணங்கள் உதவுகிறது.

ஆகவே இந்த ஆவணங்களை பாதுகாத்து உங்களுடைய சந்ததிக்கு கையளிப்பதனூடாக இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் என்கின்ற பெருமையோடும் நீங்களும் உங்களுடைய சந்ததியும் இந்த மண்ணிலே வாழவேண்டும் எனவும் தெரிவித்தார்.

1977, 1983 ஆண்டுகளில் இனவாத வன்செயல்களில் தென்னிலங்கையைவிட்டு வெளியேறி புகலிடம் தேடி கிளிநொச்சி வந்த மக்கள் காடுகளை களனியாக்கி தமது வாழ்விடங்களையும் தொழில் வாய்ப்பினையும் தேடிக்கொண்டனர்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக தாங்கள் குடியிருக்கிற காணிகளுக்கு உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படாத காரணத்தினால் நிலையான அபிவிருத்திகள் வங்கித்தேவைகள் சமூக அந்தஸ்து என்பன சவாலாக இருந்து வந்தது.

இந்நிலையில் புதிய அரசியல் சூழலில் மேற்கொள்ளப்பட்ட விரைவான நடவடிக்கை காரணமாக முதல் தொகுதி உறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்புற இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டதோடு வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச செயலாளர் நாகேஸ்வரன் செயலக உதவித்திட்டமி;டல் பணிப்பாளர் அமலதாஸ், நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் பரமோதயன் கிராம அலுவலர்களான காண்டீபன்,

திருமதி பங்கயற்செல்வன், திருமதி மஞ்சுளா, சந்திரபாலன், முன்னாள் கரைச்சிப்பிரதேச சபையின் உப தவிசாளர் நகுலேஸ்வரன் மற்றும் உறுப்பினர்களான சேதுபதி, குமாரசிங்கம் அதிபர் கண்ணபிரான் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பிரதி நிதிகள் பயனாளிகள் எனப்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

SHARE