குழந்தை பிறந்த பின் காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை எளிமையாக கண்டுகொள்ள முடியும்.ஆனால் ஆட்டிசம் அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாதது.
ஆட்டிசம் என்றால் என்ன? ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய். மற்ற குழந்தைகளைப் போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால் அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறி விடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்து விடலாம். “ஆட்டிசம்” வார்த்தை வந்தது எப்படி? 1943ல் மருத்துவர். லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர் உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையையே அறிமுகப்படுத்தினார். அவர் தனது “அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட்(Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது. அறிகுறிகள் 1. குழந்தை யார் முகத்தையும் பார்க்காதிருத்தல், 2. தனியாக இருப்பதை விரும்புதல், 3. காது கோளாறு போல் இருத்தல், 4. காரணமின்றி மற்றவர்களை தாக்குதல், 5. அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல், 6. கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல், 7. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல், 8. பேச்சுத் திறன் குறைதல், 9. விரல் சூப்புதல், நகம் கடித்தல், 10. பதட்டநிலை, 11. அடம் பிடித்தல். மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல் இக்குழந்தைகளின் பார்வை, கூரையையே வெறித்து பார்ப்பது போல், ஒரே இடத்தில் நிலைத்திருக்கும். நாம் ஒருவரிடம் பேசும் போது கண்ணைப் பார்த்து பேசுவது போல், ஆட்டிசம் குழந்தைகள் கண்ணைப் பார்த்து பேசாது. கைகளை உதறிக் கொண்டே இருக்கும். மற்ற குழந்தைகளை நாம் கட்டி அணைப்பது போல், இக்குழந்தைகளை கட்டிப் பிடித்தால் கோபம் வரும். சில குழந்தைகள் மூர்க்கமாக நடந்து கொள்வர். தண்ணீர் வேண்டும் என்றால் வாய் திறந்து கேட்காமல், சைகை மூலம் கேட்பார்கள். சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். எதற்காக சிரிக்கிறார்கள். எதற்காக அழுகிறார்கள் என தெரியாது. வலி, சிறிய அளவில் இருந்தாலும் `ஓ’ என அலறும். சில குழந்தைகள் கடும் வலி இருந்தாலும் வலியை உணர்வதில்லை. சிகிச்சைகள் முதன்மையாக நான்கு வகையான தெரப்பிகள் தேவைப்படுகின்றன. 1. நடத்தை சீராக்கல் பயிற்சிகள் – behavioral therapies 2. வளர்ச்சிக்கான பயிற்சிகள் – developmental therapies 3. கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் – educational therapies 4. பேச்சுப் பயிற்சி – speech therapy நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான், ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் முதல் சிகிச்சை. இவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி போன்ற பயிற்சி தான் சிகிச்சை. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்சினை இருக்காது. எனவே நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என சொல்ல தெரியாது. ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படாமல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். இக்குழந்தைகள் வேண்டுமென்றே இதை செய்வதாக கருதி, மிரட்டக்கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும், எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது. இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான். ஒரு விடயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பர். மற்ற குழந்தைகளை போல் இவர்களால் பாடங்களை படிக்க முடியாது. எனவே இவர்களை சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். அதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுப்பது எளிதாக இருக்கும். இக் குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர். அதைத் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். ஆட்டிசம் என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை. ஒருவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன் தரும் என்பது நிச்சயமில்லை. எனவே இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோரிடமே இப்போதைக்கு உள்ளது. |