இலங்கையில் யுத்தத்தின் பின்னர் குறிப்பாக வடகிழக்குப் பிரதேசத்தில் 24 பாலியல் பலாத்காரக் கொலைகள் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் மிகவும் மோசமான பாலியல் கொலைகள் 14 இடம்பெற்றிருக்கின்றது. 2015ஆம் ஆண்டில் பொதுத்தேர்தலை இலக்குவைத்து செய்யப்பட்டதுதான் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலையாகும். இதற்கு பரிகாரம் தேடும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புங்குடுதீவிற்குச் சென்று வித்தியாவின் வீட்டாரின் நிலைமைகளைப் பார்வையிட்ட பின்பு வீடு ஒன்றினை அமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கினார். அதனடிப்படையில் வவுனியாவில் வைத்து 03.04.2015அன்று அவர்களுக்கான வீடு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன அவர்களினால் வித்தியாவின் தாயாரிடம் கையளிக்கப்பட்டது. இவ்வீடு முழுமையாக இராணுவத்தினராலேயே நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட வித்தியாவின் ஆத்மா சாந்தியடைவதற்காகவா இந்த வீடு வழங்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வியும் எழத்தோன்றுகிறது. இதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட எந்தவொரு யுவதிக்கும் இவ்வாறான வீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இவ்விடயம் தான் ஒரு இரக்கவாதி என்பதை மக்கள் மத்தியில் எடுத்துக்காட்டுவதற்காகவும், தமிழ் மக்களுடைய பிரச்சினையில் தான் அக்கறையுடன் செயற்படுகின்றேன் என உலகிற்குக் கூறவும், இதுபோன்று மற்றுமொரு விடயமாக தன்னைக் கொலைசெய்ய வந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை மைத்திரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் விடுதலை செய்தார். ஒரு கொலைக்கு வீடு நிகராகுமா? என்பது இவ்வீட்டினை வாங்கியவர்களிடம்தான் கேட்கவேண்டும். தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சினையை நோக்கும்போது வித்தியாவைப்போன்று எத்தனையோ பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியிலும் அதிகமான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. செம்மணிப் புதைகுழியில் சங்கமித்துப்போனவர்களுக்கு இந்த சிங்கள அரசு எதனை வழங்கியது. வித்தியாவிற்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ள அதேநேரம் கொக்குவெளி கிராமத்தில் இராணுவத்தினரால் வசதியற்றவர்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது. ஒரு கல்லில் இரு மாங்காய்கள் என்பதுபோல் அரசாங்கம் தனது ஆயுதமற்ற வன்முறைகளைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறு தொடர்ந்தும் இராணுவத்தினரால் வீடுகள் அமைக்கும் பணிகள் ஏற்படுத்தப்படுமாகவிருந்தால் காலப்போக்கில் வவுனியா மாவட்டமும் வவுனியாவ என்று பெயர் மாற்றம் செய்யப்படலாம்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மீதான மக்களின் குற்றச்சாட்டு.
தமிழ்ப்பிரதேசங்களில் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் உதவிகள் வழங்கப்படாமையின் காரணமாகவே இவ்வாறு சிங்கள இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வந்திருக்கின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகும்போது குரல்கொடுப்பதோடு நின்றுவிடுகின்றனர். அரச நிதியிலோ அல்லது தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலோ உதவிகளைச்செய்ய இவர்கள் முன்வருவதில்லை. இவர்களின் தவறே வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் புதிதாக உருவாக்கம் பெறவும், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களும் தமது செயற்பாட்டினை தங்குதடையின்றிச் செய்வதற்கும் வாய்ப்புக்களாக அமைகின்றன. இத்தகைய நிலைமைகள் மாற்றப்படவேண்டுமாகவிருந்தால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் பிறநாட்டின் உதவிகளுடன் அல்லது அரச அங்கீகாரத்துடன் தமிழ் மக்களுக்கான கட்டுமானப்பணிகளை துரிதகதியில் ஆரம்பிக்கவேண்டும். துன்பத்தில் இருப்பவர்கள் கைகளில் பணம் வழங்கினால் அதனை அவர்கள் மறுக்கமாட்டார்கள். இவ்வாறானதொரு நிலையே வித்தியாவின் கொலையிலும் ஏற்பட்டுள்ளது. இராணுவம் வழங்கிவிட்டார்கள் என்பதற்காக அவர்களின் மீது பழியினை சுமத்துவதும் தவறு. இதுவரை தமிழினப் படுகொலை செய்யப்பட்டோரின் விபரங்களைக் கேட்டால் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வரும் பதில் தெரியாது என்பதேயாகும். இதுவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களின் விபரங்களை அறிந்துதான் கூறவேண்டும் என்கிறார்கள். ஆனால் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கிறார்கள். வீடுவீடாகச்சென்று வாக்குப்பிச்சை கேட்கிறார்கள். தேர்தலில் வென்ற பின்னர் நீ யாரோ, நான் யாரோ என்ற ரீதியில் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர். ஒற்றையாட்சியின் கீழுள்ள தீர்வுத்திட்டங்களின் மூலம் அரசாங்கம் வழங்கும் சலுகைகளை சொர்க்கம் என நினைத்துப் பெற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படவேண்டும். தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை மதிக்கப்படவேண்டும். நாயாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளிலும் சிங்களக்குடியேற்றங்கள் தோற்றம் பெறுகின்றன. அரச மரம் காணப்படும் இடங்களில் எல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் உருவாகின்றன. இதனைத்தடுத்து நிறுத்துவதற்கான உத்திகளை த.தே.கூட்டமைப்பு கையாளுகிறதா?
கடந்த 30வருடகாலப்போராட்ட வரலாற்றினை எடுத்துக்கொண்டால் 7500பாலியல் படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றது. படுகொலைகள் இடம்பெற்றிருக்கிறது. இதுதொடர்பான விழிப்புணர்வுகள் த.தே.கூட்டமைப்பினால் ஏற்படுத்தப்படவேண்டும். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவற்றைப் பார்த்துக்கொள்வோம் என்றால் அரசாங்கம் வழங்குவதையே பெற்றுக்கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகும். அண்மையில் வவுனியா உக்குளாங்குளப் பகுதியைச்சேர்ந்த பாடசாலை மாணவி ஹரிஷ்ணவியின் பாலியல் படுகொலையை எவரும் பெரிதுபடுத்தவில்லை. வித்தியாவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் கூட ஹரிஷ்ணவியின் படுகொலையில் கொடுக்கப்படவில்லை. அரச தரப்பின் உயர் மட்டங்கள் கூட அவ்விடத்துக்குச் செல்லவில்லை. ஹரிஷ்ணவியும் ஒரு மாணவி. இதனை ஏன் ஜனாதிபதி அவர்கள் கவனத்திற்கொள்ளவில்லை. அன்று நடந்தது தேர்தல் அரசியல். இன்று நடப்பது ஒற்றையாட்சி அரசியலா?
தமிழினத்திற்கு எதிராக தந்திரோபாயமாக அரசாங்கத்தினால் அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனைத்தடுத்து நிறுத்த த.தே.கூட்டமைப்பு அதற்கான வழிமுறைகளை முன்னெடுக்கவேண்டும். வன்னி, யாழ், கிழக்கு மாகாண த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்காக அநீதிகள் இடம்பெறும் போது அவற்றை ஓரிரு நாட்கள் வரை தட்டிக்கேட்டுவிட்டு பின்னர் தமது ஆசனத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக நடைபெற்றுமுடிந்த படுகொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள், நில ஆக்கிரமிப்பு பற்றி மௌனமாக இருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. அரசாங்கம் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையையும் நாம் அவதானித்து அதற்கேற்ப எமது செயல் வடிவங்களை மாற்றியமைக்கவேண்டும். அல்லாவிடின் மன்னார் – மன்னாரம, முல்லைத்தீவு – முல்லைத்தீவ, யாழ்ப்பாணம் – யாப்பனேய, வவுனியா – வவுனியாவ, மட்டக்களப்பு – மட்டக்களப்ப என்கின்ற அடிப்படையில் சிங்களப்பெயர்கள் சூட்டப்படும். இதையா த.தே.கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. வீரவசனம் பேசி மக்களை குழப்பநிலைக்குத்தள்ளாது ஆக்கபூர்வமான விடயங்களை சிந்தித்து மேற்கொண்டால் தமிழினத்திற்கு அது சிறந்தவொன்றாக அமையும். இல்லையேல் பாலியல் படுகொலைகள் தொடர்ந்தும் அரசினால் தேவைக்கேற்ப கட்டவிழ்த்துவிடப்படும். இல்லையேல் இதனைப் பயன்படுத்தி; இராணுவத்தரப்பினரால் தமிழ் மக்களுக்கான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட ஒரு மாணவிக்கு முதற்தடவையாக வீடு வழங்கும் நிகழ்வாக இவ்விடயம் பதிவாகிறது என்பதையும் நாம் கருத்திற்கொண்டு, தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தில் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என்பதையே இச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றது.