அட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் – 1 க்கான அலுவலகம் அட்டன் நகரிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவில் கட்டப்பட்டுள்ளதால் 43 பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதோடு தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கோட்டம் – 1 இன் அலுவலகம் இதுவரை காலமும் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் இயங்கி வந்துள்ளது. அதற்கு பதிலாக புதிய கட்டிடம் ஒன்று அட்டன் நகரிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிபர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
ஹைலண்ட்ஸ் கல்லூரி அட்டன் நகரின் மத்தியில் அமைந்துள்ளதால் அதிபர்கள் தமது பாடசாலைகளுக்குத் தேவையான இலவசப் பாடநூல்கள், இலவசச் சீருடைகள் முதலானவற்றை இலகுவாக எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது.
ஆனால், இப்போது அமைந்துள்ள பன்மூர் வித்தியாலயக் கட்டத்துக்கு செல்ல வேண்டுமானால் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி பணத்தையும் நேரத்தையும் செலவிட வேண்டியுள்ளதாகவும் அதிபர்கள் முறைப்பாடு தெரிவிகின்றார்கள்.
எனவே, பாடசாலை வளவில் கோட்டக் கல்வி அலுவலகத்தை அமைத்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தாமல் அட்டன் நகரை மையப்படுத்தி தனியான ஒரு கட்டிடத்தில் சுதந்திரமாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை பன்மூர் வித்தியாலத்துக்கு கையளித்து விடுவது பொருத்தமாக இருக்கும் எனவும், இது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
(க.கிஷாந்தன்)