தாய்நாடு திரும்பும் அகதிக்கு 5 லட்சம் வழங்க தயார்: அதிரடி அறிவிப்பு

307

நோர்வே நாட்டில் புகலிடம் கோருவதை தவிர்த்து விட்டு தாய்நாடு திரும்ப தயாராக உள்ள ஒவ்வொரு அகதிக்கும் 5 லட்ச ரூபாய் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

நோர்வே நாட்டில் கடந்த 2015ம் ஆண்டு இறுதி வரை 31,145 பேர் புகலிடத்திற்காக அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் உணவு, தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதில் அரசாங்கத்திற்கு அதிகளவில் செலவாகிறது.

இதனை தவிர்க்க அரசு அண்மையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

அதாவது, நோர்வேயில் புகலிடம் பெற்றுள்ள அல்லது புகலிடத்திற்காக காத்திருப்பவர்கள் அவர்களாகவே முன் வந்து தாய்நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால், ஒவ்வொரு நபருக்கும் 2,531 பவுண்ட்(5,37,770 இலங்கை ரூபாய்) வழங்க தயார் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் தாய்நாடு திரும்பும் ஒவ்வொரு அகதிக்கும் 1,681 பவுண்ட் ( 3,56,952 இலங்கை ரூபாய்) வழங்கப்படும். இது அனைத்து அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

ஆனால், இந்த திட்டத்தை விரைவாக பயன்படுத்திக்கொள்ளும் முதல் 500 அகதிகளுக்கு கூடுதலாக 850 பவுண்ட் (1,80,476 இலங்கை ரூபாய்) என மொத்தம் 2,531 பவுண்ட் வழங்கப்படும்.

500 அகதிகளுக்கு பிறகு தாய்நாடு செல்ல விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு 1,681 பவுண்ட் மட்டுமே வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூக ஒருங்கிணைப்பு துறை அமைச்சரான Sylvi Listhaug பேசுகையில், அகதிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு அதிகளவில் நிதி தேவைப்படுகிறது.

தற்போது நாடு திரும்பும் அகதிகளுக்கு அறிவித்துள்ள தொகையை விட கூடுதலாகவே அரசுக்கு தேவைப்படுகிறது.

ஆனால், அகதிகளை தாய்நாடு திரும்ப வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டோம். அவர்களே முன் வந்து விருப்பம் தெரிவித்தால், அரசு அறிவித்துள்ள தொகையை அளித்து தாய்நாடுகளுக்கு அனுப்பி வைப்போம்.

இந்த வரிசையில் ஒரு குடும்பத்தில் 4 உறுப்பினர்கள் இருந்தால், அவர்களுக்கு 6,727 பவுண்ட்(14,29,592 இலங்கை ரூபாய்) வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் 1-ம் திகதிக்கு முன்னால் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரி வந்துள்ளவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என Sylvi Listhaug தெரிவித்துள்ளார்.

625.117.560.350.160.300.053.800.210.160.70 (9)

SHARE