நாடெங்கும் உள்ள ஆயிரம் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிரான, பொதுமக்களின் முறைப்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருப்பதாகவும் அவற்றின் மீதான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்திருக்கிறார்.
இந்த முறைப்பாடுகளில் 65 வீதமானவை பொதுமக்களின் முறைப்பாடுகளை அசட்டை செய்தல், பாரபட்சமான விசாரணைகளும் தொடர் நடவடிக்கைகளும், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பானவை என அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டில் கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 467 எனவும் இந்த வருடம் மார்ச் 15ஆம் திகதி வரை கிடைத்த முறைப்பாடுகள் 455 எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 202 முறைப்பாடுகள் மீதான விசாரணை நிறைவுபெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.