கிருலப்பனை மற்றும் காலி மேதினக் கூட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் பிரச்சினைகளை திசை திருப்ப அரசாங்கம் சூட்சுமமான சதியொன்றை முன்னெடுத்துள்ளதாக டளஸ் அழஹப்பெரும எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழஹப்பெரும கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பொதுமக்கள் இன்று ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் அவற்றுக்கு தீர்வு காணும் எந்த வழிமுறையும் அரசாங்கத்திடம் இல்லை.
அதற்குப் பதிலாக காலி மற்றும் கிருலப்பனையில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டம் குறித்த விடயங்களை முன்வைத்து பிரச்சினைகளை திசைதிருப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அது மாத்திரமன்றி வற் வரி அதிகரிப்பு, அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தல், சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து, ஜோன் அமரதுங்கவின் முறைகேடுகள் என்பன குறித்த எந்தவொரு கேள்விக்கும் அரசாங்கத்திடம் சரியான பதில் இல்லை.
இவ்வாறான விடயங்கள் முன்வைக்கப்படும் போது அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள மேதினக் கூட்டம் குறித்த விடயங்களை தூக்கிப் பிடித்து பதிலளிப்பதே அரசாங்கத்தின் வழக்கமாக காணப்படுகின்றது.
இதன் மூலம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களை திசை திருப்ப அரசாங்கம் சூட்சுமமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.