முன்னாள் போராளிகள் துரத்தித் துரத்தி கைதாவதற்கு மகிந்த காரணமா?

252

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. வடக்கில் நடப்பவற்றை பார்க்க இதைதவிர வேறுவிதமாக கேட்கத் தோன்றவில்லை.

நல்லாட்சி, இனநல்லுறவு, சந்தேகம் களைதல் என சோடிக்கப்பட்ட வார்த்தைகளின் பின்னாலிருந்த கடுமையான முகம் வெளிப்படுகிறதா என்ற கேள்விதான் எழுகிறது.

முன்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் மீளிணைகிறார்கள் என கூறப்பட்ட கதையுடன் வடக்கு அல்லோலகல்லோலப்படுத்தப்பட்டது. சுற்றிவளைப்புக்கள், வீதிச்சோதனைகள் நடந்தன. முன்னாள் போராளிகள் பரவலாக கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் விசாரிக்கப்பட்டனர். கண்காணிக்கப்பட்டனர். மொத்தத்தில் அப்பொழுது ஒரு போர்க்கால நிலைமையை வடக்கு உணர்ந்தது.

மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கனுப்பி விட்டு, இனியாவது நிம்மதியாக இருக்கலாமென பெருமூச்சு விட, மீண்டும் அதே நிலைமை உருவாகியிருக்கிறது.

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கியுடன் வில்லங்கங்கள் ஆரம்பமாகியுள்ளன. சாவகச்சேரி சம்பவத்துடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் இதுவரை எத்தனைபேர் கைதாகியுள்ளனர் என்பதை யாரும் இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை. மனிதஉரிமைகள் சட்டத்தரணிகளின் தகவல்ப்படி பதினொரு பேர் வரை கைதாகியுள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடக்கம்.

சாவகச்சேரி சம்பவம் தென்னிலங்கையில் ஒரு புயலை கிளப்பியது உண்மை. மகிந்த அணி அதனை தமது இனவாத பிரச்சாரங்களிற்காக கையிலெடுத்தது. மகிந்த ஆதரவு அணியின் அரசியல் அடித்தளம் இனவாதத்தால் கட்டியெழுப்பப்பட்டது. தற்போது இனங்களிற்கிடையிலான பதற்றம் இல்லை. அப்படியிருந்தால்த்தான் மகிந்த அணியால் அரசியல் செய்ய முடியும். மெல்லுவதற்கு அவல் இல்லாமல் மகிந்த அணி திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில்த்தான் சாவகச்சேரி சம்பவம் நடந்தது.

சாவகச்சேரி சம்பவத்தை தொடர்ந்து வடக்கு கிழக்கில் பரவலான கைதுகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான கைதுகள் கடத்தல் பாணியிலான கைதுகள். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வின் பின்னர் விடுதலையானவர்களின் வீட்டிற்கு வருபவர்கள் அவர்களை கடத்திச் செல்கிறார்கள். இரண்டொருநாளின் பின்னர் பொலிசார் “அது கடத்தலில்லை, கைது“ என அறிக்கைவிடும் வரை நடந்தது என்னவென்பதில் குழப்பம் நிலவுகிறது.

அண்மைய கைதுகளில் கவனிக்கத்தக்க அம்சம் ஒன்றுள்ளது. விடுதலைப்புலிகளின் அறியப்பட்ட தளபதிகள்தான் கைதாகிறார்கள். அந்த அமைப்பின் எஞ்சியிருக்கும் இராணுவரீதியில் முதன்மை வாய்ந்த தளபதிகள் கைதாகிறார்கள். கிழக்கு தளபதியாக இருந்த ராம் திருக்கோவிலிலிருந்த அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டதாக மனைவி பொலிசாரிடம் முறையிட்ட பின்னரே, அது கைது என்றனர் பொலிசார். அதுபோல யாழ்ப்பாணம் நீர்வேலியில் வசித்து வந்த சாள்ஸ் அன்ரனி படையணியின் முன்னாள் தளபதி நகுலனும் இதேபாணியில் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக புலிகளின் முன்னாள் பிரமுகர்களில் ஒருவரான கலையரசனும் கைதாகியுள்ளார். வடமராட்சி கிழக்கில் அதே கடத்தல் பாணியில் இருவர் கைதாகியிருந்தனர்.

இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் கிழக்கு காடுகளில் சிறிய படையணியுடன் நிலைகொண்டிருந்தவர்கள். அதன் பின்னர் அவர்கள் பற்றிய உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், கடந்த சில வருடங்களின் பின்னர் திடீரென விடுதலையானார்கள். இடையில் அவர்கள் பற்றிய பல்வேறு ஊகங்கள் உலாவினாலும் அவை உறுதிப்படுத்ததக்கவையல்ல.

நகுலனின் கைதின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவரது தாயார் சொன்ன விடயமொன்று கவனிக்கத்தக்கது. பைது செய்யப்பட்ட பின்னர் நகுலனை முதன்முதலாக பார்ப்பதற்காக மட்டக்களப்பிற்கு சென்ற சமயத்தில் அவருக்கு திருமணமொன்றை செய்து வைத்தால் விடுதலை செய்வதாக இராணுவம் கூறியதாக. அதன் பின்னர் அவருக்கு திருமணம் செய்வித்து சிறைமீட்டனர் பெற்றோர். அதன் பின்னர் விவசாயம் செய்து வந்தார்.

ராமின் கைதின் பின்னர் பாதுகாப்பு தரப்பிலிருந்து ஒரு கருத்து கிளம்பியிருந்தது. கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிசார் பற்றியும் விசாரிக்க வேண்டியிருப்பதாக. அப்படியெனில் ராம் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் மிக முக்கியமான அந்த சம்பவம் பற்றி விசாரிக்கவில்லையா என்ற முக்கிய கேள்வியும் எழும்.

அப்படியென்றால் இந்த தொடர்கைதுகளின் பின்னணி என்ன?

பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நிலை இல்லை. ஆனால் விசாரணைகளை முன்னெடுக்கும் புலனாய்வு பிரிவினர் கைதுகளை செய்கிறார்கள் என. இதுதான் சிந்திக்க வேண்டிய இடம்.

சமூகவலைத்தளங்களில் பேசப்படும் ஒரு கருத்தை இந்த இடத்தில் இணைத்து பார்க்கலாம். அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்ச அணி இனவாதம், மதவாதம் பேசி சடுதியான அதிர்வுகளை சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அச்சுறுத்தும் சக்தியாக உருமாறியுள்ளனர். மேதினத்தை தனியாக நடத்தி தமது சுதந்திரக்கட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த மகிந்த அணி முயற்சித்த சூழல் சுதந்திரக்கட்சிக்காரர்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

விடுதலைப்புலிகள் மீள பலமடைகிறார்கள். தனிநாட்டு கோரிக்கை பலமடைகிறது என்பதுதானே மகிந்த அன்ட் கோவின் பிரமாஸ்திரம். அவர்களை அடக்க எனக்கு மட்டும்தான் வல்லமையுள்ளது என்ற ஒரே அஸ்திரம்தான் அவரிடமுண்டு. அதனை முறியடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த கைதுகள் என்பது அங்கு அலசப்படும் ஒரு கருத்து.

பார்த்து பார்த்து விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவதன் இரகசியம் என்ன? அந்தகைதுகள் செய்தியாக தென்னிலங்கைக்கும் செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்புக்கள் இல்லையென கொள்ளலாமா?

எதுஎப்படியோ இந்த அரசியல் சதுரங்கத்தில் சிக்கி சின்னாபின்னமாவது முன்னாள் போராளிகள்தான். யுத்தத்தின் முடிவில் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அவர்களை பாதுகாக்கும் கடமை எல்லோருக்கும் உள்ளது. அரசியல் சித்துவிளையாட்டுக்களில் அவர்கள் பலிக்கடாவாக்கப்படக்கூடாது. சிங்களதரப்பிற்கு மட்டுமல்ல, தமிழ் தரப்பிற்கும் இது பொருத்தமானது.xltte

SHARE