மண்சரிவு அபாயம் ஏற்படும் அதிக வாய்ப்பு உள்ளது என்ற அச்சத்தில் ஸ்காடு என்று அழைக்கப்படும் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் 38 குடியிருப்பாளர்களுக்கு அத்தோட்ட நிர்வாகம் புதிய வீடுகளை அமைக்க காணி ஒதுக்கி தருவதாக தோட்டத்தின் முகாமையாளர் ஸ்ரீ கணேசன் 05.05.2016 அன்று பிற்பகல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மண்சரிவு அபாயம் ஏற்படும் அச்சம் நிலவுவதனால் இவ் அபாயத்திற்கு உள்ளாககூடிய மேபீல்ட் தோட்டத்தின் 16, 6 மற்றும் 7ம் இலக்க தொடர் குடியிருப்பாளர்களில் தற்சமயம் 16 மற்றும் 6ம் இலக்க குடியிருப்பாளர்களில் 59 பேர் அந்த தோட்டத்தின் கலாச்சார மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்க தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அத்தோடு அபாயத்திற்குள்ளாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள இத்தோட்டத்தின் 7ம் இலக்க தொடர் வீட்டு குடியிருப்பாளர்களும் மாற்று இடங்களில் தங்க வைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேபீல்ட் தோட்டத்தின் பழைய தெப்பக்குளம் அமைந்துள்ள வீ.பீ 31ம் இலக்க தேயிலை மலை என்றும் தற்பொழுது என்.சீ 12ம் இலக்க தேயிலை மலை என்றும் அழைக்கப்படும் காட்டுப்பகுதியில் அரை அடி அகலத்திலும் 45 அடி நீளத்திலும் இவ் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பாதிக்கப்படக்கூடிய தொடர் வீடுகளின் பகுதியிலிருந்து சுமார் 150 அடி நீளப்பகுதியில் இந்த வெடிப்பு காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
கடந்த 2 தினங்களுக்கு முன் இத்தோட்ட மக்களுக்கு குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ள இடத்திலிருந்து குடிநீர் வழங்க சென்ற நபர் ஊடாக இவ் வெடிப்பு தொடர்பான தகவல் வெளி வந்துள்ளது.
இதனையடுத்து இத்தோட்ட தலைவர்களால் 04.05.2016 அன்று தோட்ட அதிகாரி மற்றும் இப்பகுதி கிராம சேவகர் உட்பட திம்புள்ள – பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சம்பவம் நிகழும் என எதிர்பார்க்கப்படும் இடத்திற்கு அருகில் உள்ள இலக்கம் 16 மற்றும் 6 ஆகிய தொடர் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு 05.05.2016 அன்று காலை தோட்ட நிர்வாகத்தினால் இம்மக்கள் கலாச்சார மண்டபம் ஒன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்காலிக மாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருக்கும் இம்மக்களில் 14 சிறுவர்கள், 24 ஆண்கள், 20 பெண்கள், ஒரு பார்வை அற்றவர் அடங்களாக 59 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு தினங்களுக்கு முன் பருவம் அடைந்த பெண் பிள்ளை ஒன்றும் அடங்குவதாகவும் இவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இவர்களுக்கான மூன்று நாட்கள் உணவை கிராம சேவகர் ஊடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலதிக நாட்களில் உணவுகளை வழங்க எவ்றேனும் முன்வர வேண்டும் என தோட்ட அதிகாரி ஸ்ரீ கணேசன் தெரிவித்தார்.
இவ்வாறு பிற இடங்களிலிருந்து வழங்கப்படும் உணவுகளை தோட்டத்தின் குடும்ப நல சேவையாளர் ஊடாக பொறுப்பேற்கப்படும் என்றும் இதன்போது பாகுபாடு இன்றி இதை வழங்க வேண்டும் என்றும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அத்தோடு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகம் காணிகளை தங்குதடையின்றி வழங்கும் என தோட்ட அதிகாரி உறுதியளித்துள்ள அதேவேளை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மற்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட மேலம் பலர் மலையக தலைவர்களுக்கு தோட்ட தலைவர்கள் ஊடாகவும் அதிகாரிகள் ஊடாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரி இதன்போது தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)