இஸ்லாமியரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரித்தானிய பிரதமர்

299

Suliman-Gani-and-David-Cameron

பிரித்தானியாவை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைத்து பேசியதற்காக அந்நாட்டு பிரதமரான டேவிட் கமெரூன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரித்தானியாவில் இஸ்லாமிய கொள்கைகளை போதித்து வரும் சுலைமான் கனி என்பவர் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் கமெரூன் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அப்போது, ‘இஸ்லாமிய மதபோதகரான சுலைமான் கனி என்பவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்’ என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

பிரதமரை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளரான மைக்கேல் ஃபாலனும் இதனை உறுதிப்படுத்தி பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதமரின் குற்றச்சாட்டால் அதிர்ச்சி அடைந்த சுலைமான் கனி தனது வழக்கறிஞர்கள் மூலம் பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மீது வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் தனது கருத்திற்கு மன்னிப்பு தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளரை தொடர்ந்து பிரதமர் கமெரூனும் சுலைமான் கனியை ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைத்து பேசியதற்காக மன்னிப்பு கோருவதாகவும், இடையில் நிகழ்ந்த தவறான புரிதலுக்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கமெரூன் தெரிவித்துள்ளார்.

SHARE