நியூயார்க் நகரில் உலகின் மிக மூத்த வயது பெண் மரணம்

283

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்த சூசன்னா முஷாட் ஜோன்ஸ் என்ற மூதாட்டி உலகின் மிக மூத்த நபர் என்ற பெயரை பெற்றிருந்தார். இதற்காக கின்னஸில் இடம் பெற்றிருந்தார். இவர் நேற்று முன்தினம் 116 வயது, 311 நாட்கள் ஆன நிலையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்தப் பெண், 1899-ம் ஆண்டு, ஜூலை மாதம் 6-ந் தேதி அங்குள்ள அலபாமா மாகாணத்தில் லாண்டஸ் கவுண்டியில் ஒரு குத்தகை விவசாயியின் மகளாக பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நியூஜெர்சிக்கு சென்றார். பின்னர் நியூயார்க்கில் குடியேறினார். அங்கு அவர் பணிப்பெண்ணாகவும், குழந்தைகள் பாதுகாப்பு வழங்குனராகவும் வேலை பார்த்தார். 1928-ம் ஆண்டு, ஹென்றி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, 1933-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். இந்த தம்பதியருக்கு குழந்தைகள் கிடையாது.

1965-ம் ஆண்டு வேலையில் இருந்து ஓய்வு பெற்றார். தனது நீண்ட கால வாழ்க்கையின் ரகசியம், நீண்ட நேரம் தூங்கியதுதான் என அவர் கூறி இருந்தார். இப்போது இவரது மரணத்தால் உலகின் மூத்த நபர் என்ற பெயரை எம்மா மொரானோ என்ற இத்தாலி பெண் பெறுகிறார். இவர் மறைந்த சூசன்னாவை விட 4 மாதங்களே இளையவர் ஆவார்.

SHARE