
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) தலைவராக இருந்த சீனிவாசன் பதவி இழந்தார். பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக ஐசிசி தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். பின்னர் அவரது பதவிக்காலத்தில் அவருக்குப் பதிலாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த ஷஷாங் மனோகர் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது ஷஷாங் மனோகரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.
இந்நிலையில், ஐ.சி.சி. தலைவராக பதவியேற்பவர் தன் சொந்த நாட்டு கிரிக்கெட் வாரிய பதவியில் இருக்ககூடாது என்பதால் ஷஷாங் மனோகர், பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு அவரது பெயர் முன்மொழியப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் வெற்றி பெற்றதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி.யின் முதலாவது சுயாதீன தலைவர் ஷஷாங் மனோகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி சேர்மன் பதவி தனக்கு கிடைத்த கவுரவம் என்றும், இதற்காக தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த ஐசிசி இயக்குனர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஷஷாங் மனோகர் கூறினார்.