கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் தொடர்ச்சியாக நிலவும் நீர்ப்பற்றாக்குறையைத் தீர்க்க உரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை பூநகரி பிரதேச கமக்கார அமைப்பு தலைவரும் சமாதான நீதவானுமான செல்வராஜா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட ஞானிமடம், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி, நல்லூர், ஆலங்கேணி போன்ற சகல பகுதிகளிலும் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
பிரதேச சபையினால் வேறு இடங்களிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகின்ற போதிலும் அது போதாமலுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கிவருகின்றனர்.
அத்துடன் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக நோயாளர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை போன்றவற்றிற்கு அனுப்பிவைக்கப்படுவதன் காரணமாக, அவர்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்.
இது தவிர பூநகரியில் உள்ள பாடசாலைகளும் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளன.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை நன்னீர்க் கிணறுகள் அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை வளாகம் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.