பசில் வெள்ளைவானில் கடத்தல்???

231

கிராமப் பகுதிகளில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் வெள்ளை வான் கடத்தல்களும், கைதுகளும் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச, தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் தன்னையும் ஒருமுறை வெள்ளை வானில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் கைது நடவடிக்கைகள் தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் இதுகுறித்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது சற்று கடினம். ஏனென்றால் கடந்த ஆட்சியின் காலத்திலும், நல்லாட்சி காலத்திலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விபரங்கள் என்னிடம் இல்லை.

சில சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமான முறையில் கைதுகளோ அல்லது விசாரணைகளோ இடம்பெற்றிருந்தால் அதனை நாங்கள் கண்டிக்கின்றோம்.

இதுகுறித்து எமது அரசாங்கத்தின்போது சகல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். இந்த அறிவுறுத்தும் நடவடிக்கை இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இந்நடவடிக்கை இடம்பெறுகின்றது என்றே நினைக்கின்றேன்.

எவ்வாறாயினும் கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்றே நினைக்கின்றேன். ஆனாலும் அவை இடம்பெறுகின்றன.

கிராமங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இந்த சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதுமட்டுமன்றி உயர்மட்ட நிலையங்களிலும் சட்டவிரோதமான முறையில் விசாரணைகள், உளவியல் மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன.

இது ஸ்ரீலங்காவில் மட்டுமல்ல, உலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை பகிரங்கமாகவே அந்நாட்டில் தெரிவிக்கப்பட்டது. அண்மைக்காலங்களில் இவை உக்கிரமடைந்துள்ளன.

இவ்வாறு இடம்பெறுகையில் அவற்றை பார்ப்பதை விடுத்து இங்கு என்ன இடம்பெறுகின்றது என்பதையே கண்களில் எண்ணெய் விட்டுத் தேடுவார்கள். இங்குள்ள அதிகாரிகள் அவ்வாறு செயற்படுவதற்கான உரிமை உரித்துடையவர்கள் என்று நான் கூறுவதில்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தேக நபரை எந்த வாகனத்திலும் சென்று கைது செய்யமுடியுமா? என்னை கைது செய்து வெள்ளை வானிலேயே அன்று இரவு கடுவலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.

அங்கிருந்து சிறைச்சாலைக்குரிய நீல நிற வாகனத்திலேயே சிறைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். எனவே பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு எந்தக் காரணத்தின் அடிப்படையில் வெள்ளைவான் கிடைத்தது என்று தெரியவில்லை என அவர் கூறினார்.basil

SHARE