ஹரிபாபு… ஆவணப்படம் பைபாஸ் சொல்லும் அதிரடி உண்மைகள்!

285

ராஜீவ் காந்தி கொலை குறித்து ‘பைபாஸ்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ராஜீவ் படுகொலை நடந்த மே 21-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதில் இந்தக் கொலைவழக்குக்கு துருப்புச் சீட்டாக இருந்த ஹரிபாபு என்ற புகைப்படக்காரரின் மரணத்தில் சந்தேகங்கள் எழுப்பப் பட்டுள்ளன.

இதுகுறித்து ஆவணப்பட தயாரிப்பு குழு வட்டாரங்கள் கூறுகையில், “ஹரிபாபு பயன்படுத்திய கேமிரா மட்டும் எவ்வித சேதமும் அடையவில்லை என்று சொல்வதில் தொடங்கி ஏராளமான சந்தேகங்கள் எங்களுக்கு ஆரம்பத்திலேயே எழுந்தன. கேமிராவின் ஃப்ளாஷ் மட்டும் மாயமாகி இருக்கிறது. எங்களின் சந்தேகத்துக்கான ஆதாரங்களைச் சேகரிக்க இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்தோம். இப்போது ஆதாரங்களுடன் உண்மைகளை வெளியே கொண்டுவந்துள்ளோம். இறந்ததாக சொல்லப்படும் ஹரிபாபுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அவரது மார்பு பகுதி மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏராளமான துளைக்கப்பட்ட காயங்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், 22 வயதான ஹரிபாபுவை 30 வயது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

சுன்னத் செய்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த சந்தேகங்களை ஆதாரப்பூர்வமாக சொல்லியும் அதை யாரும் விசாரணை அதிகாரிகள் மறுக்கவில்லை. அதோடு உடலை புதைக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் சொன்னபோதும் உடலை எரித்ததை ஏன் போலீஸார் தடுக்கவில்லை.

ராஜீவ் காந்திக்கு பூக்களை தூவுவதற்காக காங்கிரஸ் பிரமுகர் சுலைமான்சேட் இரண்டு இஸ்லாமியர்களை ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஒருவரின் உடலை தவறுதலாக ஹரிபாபு என்று போலீஸார் கருதிவிட்டனர் என்பதில் எங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. ஹரிபாபு, ஆந்திராவில் உயிருடன் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் தவறான தடய அறிவியில் ரிப்போர்ட்டால் 318 குற்றவாளிகள் டி.என்.ஏ பரிசோதனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தவறு மீண்டும் நிகழக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம்” என்றனர்.

சென்னையில் குடியிருந்த ஹரிபாபு குடும்பமும் இப்போது அங்கு இல்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரமும் ஹரிபாபுவுக்கு நெருக்கமானவர்களுக்குக்கூட தெரியவில்லை.

SHARE