யாழ்ப்பாண சிறைச்சலையினால் 150 குடும்பங்கள் பாதிப்பு

213
யாழ்ப்பாண சிறைச்சலையினால் 150 குடும்பங்கள் பாதிப்பு - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

யாழில் புதிதாக யாழ்.கொட்டடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சிறைச்சாலை கட்டடத்தினால் அதன் அயலில் உள்ள 150 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளன.

யாழ்.குடாநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சிறைச்சாலைக்கு அருகில் வசிக்கும் கொட்டடி J/80 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட மீனாட்சி குளம் பகுதியை சேர்ந்த மக்களே அவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிறைச்சாலை புதிதாக நிர்மாணிக்கும் போது அப்பகுதி மண் போட்டு மேட்டு நிலமாக மாற்றிய பின்னரே சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டது. அதனால் சிறைச்சாலை பகுதியை தாண்டி வெள்ளம் ஓட முடியாத நிலை காணப்படுவதனால் அப்பகுதியில் வெள்ளம் தேங்கி உள்ளன.

அத்துடன் சிறைச்சாலைக்கு முன்பாக இருந்த மதகு ஒன்றும் சிறைச்சாலைக்கு செல்லும் வழியில் இருந்த வாய்க்கால் ஒன்றும் மூடப்பட்டு உள்ளன. இதனால் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகின்றன.

இதனால் சிறைச்சாலைக்கு அண்டிய பகுதியில் வாழும் மக்கள் வெள்ளத்திற்கும் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் சிறைசாலை அதிகாரிகளுக்கு மக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து சிறைசாலைக்கு செல்லும் வழியில் மூடப்பட்டு இருந்த வாய்க்காலை கைதிகளை வெட்டி வெள்ளம் வழிந்தோட விட்டனர்.

இருந்த போதிலும் அந்த வாய்க்காலின் ஊடாக போதியளவில்  வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை காணப்பட்டதனால் மக்கள் தொடர்ந்து வெள்ளத்திற்குள் வாழ்கின்றனர்.

அதேவேளை இராணுவத்தினர் கடற்கரையை அண்டிய பகுதியில் கட்டட இடிபாடுகளை கொட்டியுள்ளதனால் , வெள்ளம் வீதிகளை மேவி ஓட முடியாத நிலையம் காணப்படுகின்றன.

அப்பகுதியில் தேங்கி உள்ள வெள்ள நீரினை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் துரித கெதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

SHARE