
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பினை முற்று முழுதாக நீக்கும் நோக்கில் எஞ்சியிருந்த 53 படையினரை நீக்க முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதிலும், நேற்றைய தினம் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பினை நீக்க வேண்டாம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததனைத் தொடர்ந்து இவ்வாறு, இராணுவப் பாதுகாப்பினை வாபஸ் பெற்றுக்கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் காலை 7.30 மணிக்கு இராணுவ தலைமையகத்திற்கு சமூகமளிக்குமாறு மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த படைவீரர்கள் மீள அழைக்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு அகற்றப்படவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக மஹிந்த ராஜபக்ஸவின் 50 இராணுவப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.
1988ம் ஆண்டு முதல் 28 ஆண்டுகள் தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஸவிற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து எனவும், திடீரென பாதுகாப்பு நீக்குவது பொருத்தமற்ற நடவடிக்கை என சிங்கள பௌத்த அமைப்புக்களும் தரப்புக்களும் ஏனைய நபர்களும் அரசாங்கத்திடம் கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கைகளை கருத்திற் கொண்ட அரசாங்கம் மஹிந்தவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எஞ்சிய வீரர்களை மீள அழைக்கும் நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளது.