நாட்டில் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் எவ்வாறான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தற்போதைய நிலைமையில் ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி போன்ற விடயங்கள் தொடர்பில் சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டிய தேவையும் வலுவான முறையில் வலியுறுத்தப்படுகின்றது.
இந்நிலையில் எந்தத் தரப்பாவது விட்டுக்கொடுப்புடன் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் இல்லாவிடின் தீர்வு என்பது கானல் நீராகிவிடும் என்ற விடயமும் வலியுறுத்தப்படுகின்றது.
இந்நிலையில் அரசியல் தீர்வு விடயத்தில் தீர்க்கமான வகிபாகத்தை வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மிகவும் யதார்த்தமான மற்றும் தீர்க்கமான கூற்று ஒன்றை இந்தியாவில் வைத்து வெளியிட்டுள்ளார்.
அதாவது தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நாம் நகர்ந்து விட்டோம். தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட்டு விலகி விட்டோம்.
தமிழ் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட பெரும்பாலான தமிழ் கட்சிகள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.
அத்துடன், தற்போது இலங்கையில் புதிய அரசியல் சாசனமொன்றை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. இதில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று முன்தினம் இந்தியாவில் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அங்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு யதார்த்தமான கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையே நாட்டில் தீர்வு ஒன்றை காண்பதற்கான சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அனைத்து தரப்பினரும் நியாயமானதொரு அரசியல் தீர்வை காண்பதற்கு விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இந்த முக்கியத்துவமிக்க கருத்தை முன்வைத்திருக்கின்றார்.
முக்கியமாக நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று தற்போதைய அரசியல் சூழலிலாவது முன்வைக்கப்படுமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து அமைந்திருக்கிறது.
அதாவது இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வைக் காண வேண்டுமாயின் தமிழ்த் தரப்பினர் தனி ஈழத்துக்கான கோரிக்கையை கைவிட வேண்டுமென்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைக் காண முன்வர வேண்டுமென்றும் தென்னிலங்கையில் ஒருசாரார் கூறிவருகின்றனர்.
அந்தவகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை விரும்பும் தரப்பினருக்கும் அதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் பிரிவினருக்கும் சம்பந்தனின் அறிவிப்பு சாதகமான சமிக்ஞையை வெளிக்காட்டியுள்ளது என்றே கூறலாம்.
எனவே அரசாங்கம் மற்றும் ஆளுங்கட்சியின் பிரதான தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை புரிந்து கொண்டு சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி விரைவாக இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு முன்வர வேண்டும்.
எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமான அரசியல் சூழலில் தேசிய இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் நம்பிக்கை தரும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில் அதனை வலுப்படுத்தி முன்கொண்டு செல்வதற்கு இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்தானது சாதகமானதொரு விடயமாக அமைந்திருக்கின்றது.
ஆனால் அரசாங்கம் வரலாற்றில் இடம்பெற்றதைப் போன்று தமிழ் மக்களை ஏமாற்றி விடுவதற்கு முற்படாமல் நேர்மைத் தன்மையுடனும் இதய சுத்தியுடனும் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஆளுங்கட்சியினர் பேச்சுவார்த்தை மேசைக்கு வருகை தராமல் தவிர்த்து தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தினர். அவ்வாறானதொரு ஏமாற்றமான சூழ்நிலை இதன் பின்னர் ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.
அதாவது தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினைக்கு எவ்வாறாவது தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த இடத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தாமல் பொருத்தமான முறையில் ஏற்றுக் கொள்ளத்தக்க அதிகாரப் பகிர்வினூடாக அரசியல் தீர்வுக்கு செல்வதற்கு அதிகாரத்திலிருப்போர் முயற்சிக்க வேண்டும்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கொண்டுள்ள யதார்த்தமான நிலைப்பாடு குறித்து அனைத்து தரப்பினரும் கருத்திற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையிலும் இரண்டு கட்சிகளும் தேசியப் பிரச்சினை குறித்து புரிந்துணர்வுடன் செயற்படுகின்ற சூழலிலும் தீர்வுத் திட்டமானது சாத்தியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தேசிய பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தை உணர்ந்த நிலையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த விடயத்தில் முன்னுதாரணமான முறையில் செயற்பட்டு வருகின்றனர்.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அடிக்கடி கூறி வருவதைப் போன்று 2016ம் ஆண்டுக்குள் தீர்வுத் திட்டத்தை பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதற்கு அனைத்து தரப்பினரும் தமது ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்துவதற்கு முன்வர வேண்டும்.
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் நேர்மையுடனும் செயற்படுவது மிகவும் அவசியமாகும்.
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட நேர்மை தன்மையற்ற செயற்பாடுகளே தீர்வுத் திட்டமென்பது கானல் நீராக மாறுவதற்கு காரணமாகும்.
எனவே அவ்வாறானதொரு நிலையை இதற்கு பின்னர் தோற்றுவிப்பதற்கு எவரும் முயற்சிக்கக் கூடாது.அதுமட்டுமன்றி, தற்போது மலர்ந்துள்ள இந்த சாதகமான அரசியல் சூழலை இனவாத சக்திகள் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு ஒருவரும் இடமளிக்கக்கூடாது.
மிகவும் அவதானமாகவும், கவனம் செலுத்தியுமே இந்த விடயத்தில் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். காரணம் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருக்கும் அரசியல் தீர்வு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை இனவாதிகளுக்கு தீனி போடும் விடயமாக யாரும் மாற்றிவிடக்கூடாது.
எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு யதார்த்தமான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையிலும் இரண்டு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள சூழலிலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு அனைவரும் முழு மூச்சுடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.